புதுடெல்லி: இருதரப்பு வணிக உடன்பாடு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய வணிக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்கிறார்.
அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, இருதரப்பு வணிக உடன்பாடு தொடர்பான முதற்கட்டப் பேச்சுவார்த்தையை இவ்வாண்டிற்குள் நடத்த கடப்பாடு கொண்டுள்ளதாக அவ்விரு நாடுகளும் கூட்டாக அறிவித்திருந்தன.
வரும் 2030ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வணிகத்தின் மதிப்பை 500 பில்லியன் டாலராக (S$675 பில்லியன்) உயர்த்த இருநாடுகளும் இலக்கு கொண்டுள்ளன.
மார்ச் 8ஆம் தேதி வரையிலான சந்திப்புகள் ரத்துசெய்யப்பட்ட நிலையில், அமைச்சர் கோயலின் அமெரிக்கப் பயணம் திடீர்ப் பயணமாக அமைந்துள்ளது.
கடந்த ஜனவரியில் இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டோனல்ட் டிரம்ப், வரி தொடர்பில் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அவ்வகையில், ‘வரிக்கு வரி’ என்ற அடிப்படையில் தனது பொருள்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அமெரிக்காவும் இறக்குமதி வரி விதிக்கும் என்று அவர் அறிவித்தார்.
இதனால், வாகனம், வேளாண்மை உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த இந்திய ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்தனர்.
அமெரிக்காவின் இறக்குமதி வரியால் ஓராண்டிற்கு $7 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்படலாம் என்று ‘சிட்டி’ குழுமப் பகுப்பாய்வாளர்கள் மதிப்பிட்டிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், தமது பயணத்தின்போது அமெரிக்க வர்த்தகத் துறைப் பேராளர் ஜேமிசன் கிரீரையும் வணிக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக்கையும் அவர் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கப் பொருள்களுக்கு இந்தியா வழங்கலாம் என எதிர்பார்க்கப்படும் வரிச்சலுகைகள், அமெரிக்காவின் இறக்குமதி வரிவிகிதக் குறைப்பு, இருதரப்பு வணிக மேம்பாடு ஆகியவை குறித்து அவர் பேசுவார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
வணிகப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், அமெரிக்கப் பொருள்கள்மீதான வரிகளை இந்தியா ஏற்கெனவே குறைத்துள்ளது. எடுத்துக்காட்டாக, அதிக விலைமதிப்புடைய மோட்டார்சைக்கிள்களுக்கு 50 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாகவும் போர்பன் மதுவிற்கு 150 விழுக்காட்டிலிருந்து 100 விழுக்காடாகவும் வரி குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆகப் பெரிய வணிகப் பங்காளியாக அமெரிக்கா விளங்குகிறது. ஆண்டு அடிப்படையில், கடந்த ஜனவரி வரையிலான பத்து மாதங்களில் அமெரிக்காவுடனான இந்தியாவின் வணிகம் 8% கூடி, 106 பில்லியன் டாலராக உயர்ந்தது.

