புதுடெல்லி: மது கலந்த இருமல் மருந்து உள்ளிட்ட மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் மத்தியச் சுகாதார அமைச்சு, வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வெளியிட்டுள்ள அறிவிப்பில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
புதிய விதிகளின்படி 12 விழுக்காட்டிற்கும் அதிகமான மது கலந்து, 30 மில்லிலிட்டருக்குமேல் போத்தல்களில் விற்கப்படும் மருந்துகள் அனைத்தும் ‘அட்டவணை எச்1’ எனும் பிரிவின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, இவற்றை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் நேரடியாக மருந்தகங்களில் வாங்க முடியாது.
மது அதிகம் கலந்த சில இருமல் மருந்துகள், ஊட்டச்சத்து மருந்துகள், வாய்வழியாக உட்கொள்ளப்படும் பிற மருந்துத் தயாரிப்புகளை உரிய மேற்பார்வையின்றி மருந்துச்சீட்டு இல்லாமல் விற்றால், அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதைத் தடுக்கவே இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று அமைச்சு தெரிவித்தது.
இந்த வகை மருந்துகளை அட்டவணை எச்1 பிரிவுக்கு மாற்றுவதன் மூலம், தவறான பயன்பாட்டைக் குறைக்கவும் பொறுப்பான விநியோகத்தை உறுதிசெய்யவும் மருந்துகள்மீதான கண்காணிப்பை வலுப்படுத்தவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நோயாளிகளைப் பொறுத்தவரை, இந்த மாற்றம் என்பது இந்த மருந்துகள் பாதுகாப்பற்றவை அல்லது தடைசெய்யப்பட்டவை என்று பொருள் கொள்ளக்கூடாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மருந்துகள் (5வது திருத்த) விதிகள் 2026 சட்டத்தின் மூலம் இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்கீழ், சாதாரண மருத்துவப் பொருள்களின் வரிசையில் இடம் பெற்றிருந்த ‘சிரப்ஸ்’ என்ற வார்த்தை அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டுவிட்டது.
இதன் மூலம், இதுவரை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி விற்கப்பட்டு வந்த திரவ மருந்துகள் (ஊட்டச்சத்து மருந்து, இருமல் மருந்து) அனைத்தும், தற்போது கடுமையான மருந்து ஒழுங்குமுறைப் பட்டியலின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் (டிடிஏபி) கலந்தாலோசித்து, மருந்துகள், அழகுசாதனப் பொருடள்கள் சட்டம், 1940இன் பிரிவுகள் 12 மற்றும் 33இன்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த இறுதி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக இந்தியச் சுகாதார அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

