ஈரான் சிறையில் உள்ள இந்தியர் பிப்ரவரி 4ல் விடுவிக்கப்படலாம்

1 mins read
புகைப்படங்கள் எடுத்ததற்காக சிறைவாசம் சென்றார்
bed79e98-9faf-4a7a-87ce-c8a5c488a95d
இந்தியப் பொறியாளர் யோகேஷ் பாஞ்சால், 33, ஈரானில் காணாமல் போவதற்கு முன் எடுக்கப்பட்ட படம். - படம்: பிரவின் ஜெத்வாத்/எக்ஸ்

சத்ரபதி சம்பாஜிநகர்: இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், ஹிங்கோலியைச் சேர்ந்த பொறியாளரான யோகேஷ் பாஞ்சால், 33, கிட்டத்தட்ட இரு மாதங்களாக ஈரானில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில், தலைநகர் டெஹ்ரானில் உள்ள சிறையில் அவர் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை வாட்ஸ்அப்பில் தம் மனைவியைத் தொடர்புகொண்ட யோகேஷ், அநேகமாக செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) தாம் விடுவிக்கப்பட உள்ளதாகவும் அதன் பிறகு தாம் இந்தியா திரும்பவுள்ளதாகவும் தெரிவித்தார்.

டெஹ்ரானில் புகைப்படங்கள் எடுத்ததற்காக யோகேஷ் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக அவரின் குடும்ப நண்பரும் சமூக ஆர்வலருமான பிரவின் ஜெத்வாத் சொன்னார்.

“யோகேஷ் அவருடைய மனைவியிடம் ஒன்றரை நிமிடத்திற்குப் பேசினார். எதுவும் பற்றி கவலைப்பட வேண்டாம் என அவர் கூறினார். இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் தாம் நாடு திரும்பவிருப்பதாக அவர் தெரிவித்தார்,” என்றார் பிரவின்.

“யோகேஷ் எடுத்திருந்த புகைப்படங்கள் குறித்து ஈரானிய அதிகாரிகள் கவலை கொண்டனர். கேள்விக்குரியான படங்கள் வெறும் வேடிக்கைக்காக எடுக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே பகிர்ந்துகொள்ளப்பட்டன. அவர் தம் மனைவிக்கு அனுப்பிய வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளையும் புகைப்படங்களையும் ஆதாரமாக வழங்கினோம்,” என்று பிரவின் தெரிவித்தார்.

உலர் பழங்கள், ஆப்பிள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் வணிகத்தை மேற்கொண்டுவரும் யோகேஷ், டிசம்பர் 5ஆம் தேதி சுற்றுப்பயண விசாவில் டெஹ்ரான் சென்றிருந்தார். டிசம்பர் 7 முதல் குடும்ப உறுப்பினர்களால் அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் போனது.

குறிப்புச் சொற்கள்