கடற்கொள்ளையரிடமிருந்து 19 பாகிஸ்தானியரை மீட்ட இந்தியக் கடற்படை

கடற்கொள்ளையரிடமிருந்து 19 பாகிஸ்தானியரை மீட்ட இந்தியக் கடற்படை

1 mins read
d69c7553-b051-464d-a7f7-d94f2ac49d39
பிடிபட்ட கடற்கொள்ளையருடன் இந்தியக் கடற்படையினர். - படம்: இந்தியக் கடற்படை / எக்ஸ்
multi-img1 of 3

புதுடெல்லி: சோமாலியக் கடற்கொள்ளையரின் பிடியில் சிக்கிய 19 பாகிஸ்தானியர்களை இந்தியக் கடற்படையினர் மீட்டனர்.

ஐஎன்எஸ் சுமித்ரா என்ற இந்தியப் போர்க்கப்பல் மூலம் 36 மணி நேரங்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது மீட்பு நடவடிக்கை இது.

முன்னதாக, கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீன்பிடிக் கப்பலிலிருந்து 17 ஈரானியர்களை இந்தியக் கடற்படை மீட்டது.

சோமாலியக் கடலோரப் பகுதியில் அண்மைக்காலமாக கப்பல்கள்மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, சோமாலியக் கிழக்குக் கடலோரத்திலும் ஏடன் வளைகுடாப் பகுதியிலும் ஐஎன்எஸ் சுமித்ரா கடல்துறைப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஈரானிய மீன்பிடிக் கப்பலிலிருந்து உதவிகோரி அழைப்பு வந்தது. அதனையடுத்து, ஐஎன்எஸ் சுமித்ரா மூலம் உதவிக்கு விரைந்த இந்தியக் கடற்படையினர், அதிலிருந்த 17 பேரை மீட்டனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமையும் (ஜனவரி 30) உதவி கோரி அழைப்பு வந்ததை அடுத்து, அல் நயீமி என்ற இன்னோர் ஈரானிய மீன்பிடிக் கப்பலை இந்தியக் கடற்படையினர் இடைமறித்தனர்.

பின்னர் அதிரடியாக அதனுள் புகுந்து, கடற்கொள்ளையரின் பிடியில் சிக்கியிருந்த பாகிஸ்தானியரை மீட்டனர்.

கடற்கொள்ளையரின் நிலை என்னவானது எனக் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் அமர்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னால் இந்தியக் கடற்படையினர் நின்றிருக்கும் புகைப்படத்தை இந்தியக் கடற்படை தனது ‘எக்ஸ்’ ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, செஷல்ஸ் தற்காப்புப் படை கடத்தப்பட்ட கப்பலில் இருந்த ஆறு இலங்கை மீனவர்களைக் கடந்த சனிக்கிழமையன்று மீட்டது.

குறிப்புச் சொற்கள்