தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பை வலுப்படுத்த முற்படும் தகவல் மையம்

2 mins read
46b9215f-20bb-4654-b5f4-281de7e57932
இந்திய அரசாங்கம் நிறுவியுள்ள தகவல் மேலாண்மை, பகுப்பாய்வு மையம். - படம்: கி.ஜனார்த்தனன்

குருகிராம்: இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான தரவுகளின்படி, இந்தியப் பெருங்கடல் வட்டாரத்தில் 164 கடற்கொள்ளை, ஆயுதக் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தலையும் ஒழுங்கற்ற மனித இடப்பெயர்வுகளையும் கண்காணித்து, இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது இந்தியாவிலுள்ள ஒரு கண்காணிப்பு மையம்.

அனைத்துலக வணிக, எரிசக்தித் துறைகளின் உயிர்நாடிகளில் ஒன்றாகத் திகழும் இந்தியப் பெருங்கடல், கடற்கொள்ளை முதல் புவிசார் அரசியல் பதற்றநிலைவரை சிக்கலான கடல்சார் பாதுகாப்புச் சவால்கள் பலவற்றை எதிர்கொள்கிறது.

இந்தச் சவால்களைக் கையாள இந்தியா, இருமுனை அணுகுமுறையைச் செயல்படுத்தியுள்ளது.

தகவல் மேலாண்மை, பகுப்பாய்வு மையத்தையும் (ஐஎம்ஏசி) தகவல் ஒருங்கிணைப்பு மையத்தையும் (ஐஎஃப்சி) இந்திய அரசாங்கம் ஏற்கெனவே நிறுவியுள்ளது.

புதுடெல்லிக்கு அருகிலுள்ள குருகிராமில் இந்தியக் கடற்படையால் இவ்விரு மையங்களும் நடத்தப்படுகின்றன. இந்தியப் பெருங்கடல் நீர்வழியைக் காப்பதில் இம்மையங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பல்வேறு தரப்புகளிலிருந்து தரவுகளைத் திரட்டி பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு மையமாக ஐஎம்ஏசி செயல்படுகிறது.

தேசிய தளபத்தியம், கட்டுப்பாடு, தொடர்பு மற்றும் உளவுக்கான கட்டமைப்பு வலைப்பின்னலின் ஒரு முக்கிய அமைப்பாக 2014ல் அது நிறுவப்பட்டது.

இந்தக் கட்டமைப்பில் கடலோரக் கண்காணிப்பு ரேடார்கள், கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் ஆகியவை தானியங்கி அடையாள அமைப்புகளிலிருந்து தகவல்களை ஒருங்கிணைத்துத் தொகுக்கின்றன.

“குறிப்பிட்ட ஒரு நேரத்தில், இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 15,000 முதல் 17,000 கப்பல்கள் இருக்கும்,” என்று ஐஎஃப்சியின் செயல்பாட்டு அதிகாரி தளபதி ரோஹித் ஜாதவ் கூறினார்

கடந்த ஆண்டு 165,000க்கும் மேற்பட்ட தனிப்பட்ட நிறுவனங்களைக் கண்காணித்த இந்த அதிநவீன அமைப்பின் செயல்பாடுகள் தொடர்வதை உறுதிசெய்ய பாதுகாப்பு ஏற்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்குக் குறிமுறையாக்கத் தொழில்நுட்பமும் பங்களிக்கிறது.

போக்குவரத்து முறைகள், போக்குகள், வழக்கத்திற்கு மாறான நடப்புகள் ஆகியவற்றைக் கண்காணிப்பதன் மூலம், நாட்டுக்கு எதிரான அமைப்புகள், நாடுகடந்த குற்றக் கும்பல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் செயல்படக்கூடிய நுண்ணறிவுடன் இந்த மையங்கள் திகழ்கின்றன.

2019 ஏப்ரலில் அனைத்துலகக் கடல்சார் அமைப்பாக அதிகாரத்துவமாக அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து அது, மேலும் 28 நாடுகளில் 76 இணைப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

“தனித்து நாம் மிகக் குறைவாகவே செய்ய முடியும்; ஒன்றாக நாம் நிறைய சாதிக்க முடியும். கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான திறவுகோல் ஒத்துழைப்புத்தான்,” என்கிறார் தளபதி ஜாதவ்.

குறிப்புச் சொற்கள்