பெண் என்பதால் வேலை மறுப்பு; இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு அபராதம்

பெண் என்பதால் வேலை மறுப்பு; இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு அபராதம்

படம்: ராய்ட்டர்ஸ்

18 Sep 2026 - 7:09 pm

2 mins read

ஹரியானா: 1988ஆம் ஆண்டில் பெண் என்ற காரணத்தைக் காட்டி பணி மறுக்கப்பட்டவருக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு வழங்க இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் மாவட்டத்தைச் சேர்ந்த சுமித்ரா என்பவர், கடந்த 1988ஆம் ஆண்டில், கர்னலில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘எல்பிஜி’ எரிவாயு நிரப்பும் ஆலையில் உதவியாளர் பணிக்காக விண்ணப்பித்தார்.

அப்பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 49 பேர் பட்டியலில் அவரும் இடம்பெற்றிருந்தார்.

கல்வித் தகுதி, பிற அனைத்துத் தேவைகளையும் அவர் பூர்த்தி செய்திருந்தபோதிலும், இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 43 பேரின் இறுதிப் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை.

பெண் என்ற காரணத்தினாலேயே அவருக்கு வேலை மறுக்கப்பட்டதாகப் பின்னர் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நிறுவனத்துக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் 1990-ல் சுமித்ரா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், தொழிலாளர் அல்லாத வேறொரு பணியில் அமர்த்துமாறு உத்தரவிட்ட நிலையில், ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் சுமித்ரா மேல்முறையீடு செய்தார்.

இவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் சுமித்ரா மேல்முறையீடு செய்தார்.

இந்தியன் ஆயில் தரப்பு வழக்கறிஞர், “நிறுவனத்தின் பணிச்சூழல், ஆண்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய அசாதாரணமான பணிநேரம் ஆகியவற்றின் காரணமாக, மனுதாரர் ஒரு பெண் என்ற அடிப்படையில் அப்பணிக்கு அவர் பொருத்தமானவராகக் கருதப்படவில்லை,” என்ற வாதத்தை முன்வைத்தார்.

அந்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், “வீடுகளில் ஆண்கள் இல்லாதபோது பெண்கள்தான் சிலிண்டர்களை மாற்றுகிறார்கள். அப்படியிருக்க, அவர் ஒரு பெண் என்பதாலேயே அவரது பணி நியமனத்தை நீங்கள் மறுத்துள்ளீர்கள். மத்திய அரசின் ஒரு நிறுவனத்தால் பெண்ணுக்கு அவமதிப்பு இழைக்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தனர்.

வழக்கு 30 ஆண்டுகள் காலதாமதமானதைக் கருத்தில் கொண்டு, சுமித்ரா தற்போது ஓய்வுபெறும் வயதைக் கடந்துவிட்டதால், ரூ. 12 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்