அமெரிக்காவில் தாயையும் தம்பியையும் கொன்ற இந்திய வம்சாவளிச் சிறுவன் கைது

அமெரிக்காவில் தாயையும் தம்பியையும் கொன்ற இந்திய வம்சாவளிச் சிறுவன் கைது

1 mins read
d5d7f35c-2474-4611-adec-8833860854b9
அர்ஜுன். - படம்: என்டிடிவி
Google News Preferred Icon

புதுடெல்லி: அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் தாயையும் உடன்பிறந்த தம்பியையும் படுகொலை செய்ததாக 17 வயது இந்திய வம்சாவளிச் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஆக்டன் நகரில் உள்ள மார்த்தா லேன் பகுதியில் வசித்து வந்த சுதா வெங்கடேசன், 45, அவரது இளைய மகன் சித்தார்த் அரவிந்த், 14, ஆகியோர் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) மாலை வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

பணிக்குச் சென்றிருந்த சுதாவின் கணவர், குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியாமல் போனதை அடுத்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் உடல்களிலும் பலத்த காயங்கள் இருந்ததைக் கண்டறிந்தனர்.

கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சுதாவின் மூத்த மகனான 17 வயது அர்ஜுன் அரவிந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்திற்குப் பின் தாயாரின் காரில் தப்பிச்சென்ற அர்ஜுனை வேய்லேண்ட் பகுதியில் காவல்துறையினர் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

அர்ஜுன் கடந்த சில நாள்களாக ‘சாட்ஜிபிடி’ போன்ற செயற்கை நுண்ணறிவுத் தளங்களைப் பயன்படுத்தி, ‘குடும்பத்தைக் கொல்வது எப்படி?’ என்பது குறித்து விவரங்களைத் தேடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.  

அர்ஜுன் மீது இரு கொலை, கொடூரத் தாக்குதல், வாகனத் திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சிறார் நீதிமன்றத்திற்கு கொலை வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் இல்லாததால், இந்த வழக்கு விரைவில் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைக்கு வரவுள்ளது.

குறிப்புச் சொற்கள்