வாஷிங்டன்: அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் சாலைச் சச்சரவில் 29 வயதான இந்திய வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அம்மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள இண்டியனாபொலிஸ் நகரில், காரில் சென்று கொண்டிருந்த கவின் தசாவூர், டிரக் வாகனத்தை முந்தி சென்றார். இதனால், அவருக்கும், டிரக் வாகன ஓட்டிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
காரில் இருந்து இறங்கிச் சென்ற கவின் தசாவூர், டிரக் வாகன ஓட்டியுடன் துப்பாக்கியை காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, டிரக் வாகன ஓட்டி அவரைச் சுட்டார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட கவின் தசாவூர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது தற்காப்புக்காக, அவரை சுட்டதாகக் குற்றவாளி வாக்குமூலம் கொடுத்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் கூறினார். மாரியோன் நகர சட்ட அலுவலக ஆலோசனையின்படி, குற்றவாளி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பேச்சாளர் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த கவின் தசாவூர் மெக்சிகோவை சேர்ந்த விவியனா ஜமோரா என்பவரை ஜூன் 29ம் தேதி திருமணம் செய்துகொண்டார். அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
நியூயார்க் போஸ்ட் பகிர்ந்த கைப்பேசி புகைப்படங்கள், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளில், தொப்பி, பச்சை சட்டை, அரைக்கால் சட்டை அணிந்த ஒருவர் தனது காரில் இருந்து இறங்கி வெள்ளை செவ்ரோலெட் டிரக்கை நெருங்கி, வாகனத்தை ஓட்டியவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காணமுடிகிறது. கையில் துப்பாக்கியுடன் டிரக் வாகனத்தின் கதவை அவர் வேகமாகத் தட்டுகிறார். தொடர்ந்து, டிரக் வாகனத்தில் இருந்தவர், தசாவூரை நோக்கி பலமுறை சுடுகிறார். அவர் தரையில் விழுகிறார்.