தரவரிசையில் முன்னேறிய இந்தியக் கடப்பிதழ்

தரவரிசையில் முன்னேறிய இந்தியக் கடப்பிதழ்

1 mins read
f1f25379-5027-46bc-a376-da0bebeb3c26
அனைத்துலக தரவரிசைப்படி 2025ஆம் ஆண்டு 85ஆம் இடத்தில் இருந்த இந்தியக் கடப்பிதழ் இவ்வாண்டு 75ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதுடெல்லி: இந்தியாவின் அனைத்துலக கடப்பிதழ் நிலவரம் இந்த ஆண்டு முன்னேறியிருப்பதாக ஹென்லெய் கடப்பிதழ் குறியீடு தெரிவித்துள்ளது.

அனைத்துலக தரவரிசைப்படி 2025ஆம் ஆண்டு 85ஆம் இடத்தில் இருந்த இந்தியக் கடப்பிதழ் இவ்வாண்டு 75ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக, 80வது இடத்திலிருந்த இந்தியக் கடப்பிதழ் இவ்வாண்டு ஜனவரியில் 75வது இடத்தைப் பிடித்தது.

இருப்பினும், விசா இன்றி இந்தியக் கடப்பிதழைக் கொண்டு பயணம் செய்யக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 57 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும். அந்த எண்ணிக்கை இவ்வாண்டு ஜனவரியில் 55க்குக் குறைந்து பிப்ரவரியில் 56க்குக் கூடியது.

ஹென்லேய் கடப்பிதழ் குறியீட்டில் 227 நாடுகளில் 199 கடப்பிதழ்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன. அதற்கு அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் தரவுகள் பயன்படுத்தப்பட்டன.

ஈரான், பொலிவியா ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து செல்வோருக்கான விசா கொள்கையை மாற்றின.

கடந்த ஆண்டு இறுதியில் இந்தியர்களுக்கான விசா இல்லா அனுமதியை ஈரான் தற்காலிகமாக நிறுத்தியது. இந்திய நாட்டவர் சம்பந்தப்பட்ட மோசடிகள், ஆள்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் ஈரான் அத்தகைய முடிவை எடுத்தது. இனி ஈரான் செல்லும் இந்திய நாட்டவர் கட்டாயம் விசா எடுக்கவேண்டும்.

பொலிவியா மின் விசா கட்டமைப்புக்கு மாறியதால் இந்தியாவிலிருந்து செல்வதற்கு முன்னரே விசாவைப் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்