ஜெனிவா: ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு ஐந்து மயில்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது. அவற்றில் ஓர் அரிய வகை வெள்ளை மயிலும் அடங்கும்.
ஐநா தலைமையக அலுவலக வளாகத்தில் உள்ள புகழ்பெற்ற ‘அரியானா பூங்காவின் சுற்றுச்சூழலை அழகுபடுத்தும் விதமாக முன்னர் அங்கு மயில்கள் வளர்க்கப்பட்டன. ஜெனீவாவின் மிக முக்கியமான பசுமைப் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, 46 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள அரியானா பூங்கா.
கடந்த 1981ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அந்த அரியானா பூங்காவிற்கு இரண்டு மயில்களைப் பரிசாக வழங்கினார்.
இப்போது, 45 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் நரேந்திரமோடி அரசு, ஐந்து மயில்களை அந்தப் பூங்காவிற்குப் பரிசாக அளித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற ஒரு விழாவில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி அரிந்தம் பாக்சி, ஐ.நா. ஓஜி தலைமை இயக்குநர் டடியானா வலோவயாவிடம் அப்பறவைகளை முறைப்படி வழங்கினார்.
இந்தச் செயல், இந்தியாவின் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தையும், ஐ.நா.வுடனான அதன் நீண்டகாலத் தொடர்பையும் சுட்டிக்காட்டுகிறது.
இந்தக் குழுவில் நான்கு நீல மயில்களும், ஒரு வெள்ளை இறகுகளைக் கொண்ட ஆண் மயிலும் அடங்கும். அவற்றின் நீல, வெள்ளை நிற இறகுகள், ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய வண்ணங்களையும் சித்திரிக்கின்றன.
இந்தியத் தூதரகம் அந்த மயிலை ‘அழகு, கம்பீரம் மற்றும் மீள்திறனின் சின்னம்’ என்று வர்ணித்து, இந்த நன்கொடையை பல்லுயிர்ப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான இந்தியாவின் அர்ப்பணிப்புடன் தொடர்புபடுத்தியது.


