வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய இந்திய மருத்துவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு

1 mins read
442fd340-ade7-4401-994c-eac00235ba6f
விமான நிலையத்திலிருந்து வீட்டிற்குக் காரில் சென்றபோது நேர்ந்த விபத்தில் மாண்டுபோன மருத்துவர் பிந்து பிலிப், 51. - படம்: யுஏஇ ஊடகம்

திருவனந்தபுரம்: வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பி, விமான நிலையத்திலிருந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் நேர்ந்த விபத்தில் பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த திருவாட்டி பிந்து பிலிப், 51, என்ற அந்த மகப்பேற்று மருத்துவர் ஷார்ஜாவில் பணியாற்றி வந்தார்.

இந்தியாவில் வீடு கட்டி வந்த அவர், வரும் மே மாதம் புதுமனைப் புகுவிழா நடத்தத் திட்டமிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக குறுகிய காலப் பயணமாக துபாயிலிருந்து கிளம்பி திங்கட்கிழமை (மார்ச் 24) அதிகாலை திருவனந்தபுரத்தைச் சென்றடைந்தார்.

அங்கிருந்து கார் மூலம் வீட்டிற்குச் சென்றபோது, விபத்து நேர்ந்தது. காரை ஓட்டியவர் கண்ணயர்ந்ததே அதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. விபத்தில் கார் ஓட்டுநரும் காயமுற்றார்.

மருத்துவர் பிந்துவின் கணவர் ஈராண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார் என்றும் அவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மருத்துவர் பிந்துவின் மகள் திங்கட்கிழமை மாலையில் இந்தியா செல்லத் திட்டமிட்டிருந்தார் என்று ஷார்ஜாவிலுள்ள அவரின் குடும்ப நண்பர் ஒருவர் கூறினார்.

“மருத்துவர் பிந்து இந்தியா சென்றுவிட்டதால் அவரின் மகள் வீட்டில் தனியாக இருந்தார். இப்போது அப்பெண் எங்களுடன் இருக்கிறார். மருத்துவர் பிந்து பணியாற்றிய மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த ஒருவர் அப்பெண்ணை இந்தியா அழைத்துச் செல்லவிருக்கிறார்,” என்று அவர் சொன்னார்.

மருத்துவர் பிந்துவின் மகன் திருவனந்தபுரத்தில் மருத்துவக் கல்வி பயின்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்