சென்னை: இந்திய அதிபர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாகத் தமிழகத்திற்குச் சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) காலையில் சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ரவியும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அவரை வரவேற்றனர்.
சென்னை நந்தம்பாக்கத்தில் சிட்டி யூனியன் வங்கியின் 120ஆம் ஆண்டு நிறைவு விழாவில் அதிபர் முர்மு கலந்துகொண்டார். கிராமங்களில் வாழும் மக்களின் வளர்ச்சியில் வங்கிகள் முக்கியப் பங்களிப்பதாக அவர் கூறினார்.
அதே விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய வளர்ச்சியைக் கட்டமைப்பதில் தனியார் வங்கிகளின் பங்கு இன்றியமையாதது என்றார். பொருள் சேவை வரி சீர்திருத்தம் வெளிப்படையான முறையில் நடைபெறும் என்றும் அவர் உறுதிகூறினார்.
அதிபர் முர்மு புதன்கிழமை (செப்டம்பர் 3) திருச்சி செல்கிறார். அங்கு அவர் ஸ்ரீரங்கம் கோயிலுக்குப் போகிறார்.
பின்னர் திருவாரூர் செல்லும் இந்திய அதிபர், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10ஆம் பட்டமளிப்பு நிகழ்வில் பங்கேற்கிறார். அதிபரின் தமிழகப் பயணத்தை முன்னிட்டு சென்னை, திருச்சி, திருவாரூர் வட்டாரங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

