புதுடெல்லி: நடப்பாண்டுக்கான பத்ம விருதுகளை இந்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.
மொத்தம் 131 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 66 பேருக்கு விருது வழங்கும் நிகழ்வு புதுடெல்லியில் உள்ள அதிபர் மாளிகையில் திங்கட்கிழமை (மே 25) நடைபெற்றது.
இந்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப் பணி, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோர்க்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
இம்முறை, ஐந்து பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
விருது வழங்கும் விழாவில் துணை அதிபர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னையைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் என். ராஜமுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. மறைந்த இந்தித் திரைப்பட நடிகர் தர்மேந்திரா சிங் தியோலுக்கு பத்ம விபூஷண் வழங்கப்பட்டது.
தமிழக முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே, தமிழகத்தின் நீலகிரியைச் சேர்ந்த கிருஷ்ணன் (மறைவு), ஜெர்மனியைச் சேர்ந்த இசை ஆய்வாளர் லார்ஸ் கிறிஸ்டியன் கோச், தமிழக காவல் துறை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், புதுவை சிலம்பம் வீரர் பழனிவேல், தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சிவசங்கரி, சமூக வானொலியின் தந்தை என்றழைக்கப்படும் ஸ்ரீதர், ஓதுவார் சுவாமிநாதன் ஆகியோர் பத்ம ஸ்ரீ விருது அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.


