மீண்டும் ரஷ்யா செல்கிறார் இந்தியப் பிரதமர் மோடி

1 mins read
6a362636-e47e-4699-a93b-1d78d8855e93
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாண்டில் ரஷ்யா செல்வது இது இரண்டாவது முறை. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ‘பிரிக்ஸ்’ உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா செல்லவிருக்கிறார்.

திரு மோடி இவ்வாண்டில் ரஷ்யா செல்வது இது இரண்டாவது முறை. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் அவர் அங்கு சென்று, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்துப் பேசினார்.

ரஷ்யா - உக்ரேன் இடையே போர் நடந்துவரும் சூழலில் திரு மோடியின் அப்பயணத்தை ‘அமைதிக்கு விழுந்த பேரிடி’ என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, அதற்கடுத்த மாதம் உக்ரேன் சென்றார் திரு மோடி. அப்போது, எந்தப் பிரச்சினையையும் போர்க்களத்தில் தீர்க்க முடியாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ரஷ்யாவின் வோல்கா நதியை ஒட்டி அமைந்துள்ள கசான் நகரில் ‘பிரிக்ஸ்’ மாநாடு நடக்கவிருக்கிறது.

அதில் கலந்துகொள்ளும் பொருட்டு, பிரதமர் மோடி அக்டோபர் 22, 23ஆம் தேதிகளில் ரஷ்யாவில் இருப்பார் என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

‘பிரிக்ஸ்’ அமைப்பு 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் ஆங்கிலப் பெயர்களின் முதல் எழுத்தைச் சேர்த்து, அப்பெயர் உருவாக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்