தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பங்ளாதேஷ் இடைக்காலத் தலைவருடன் இந்தியப் பிரதமர் மோடி சந்திப்பு

2 mins read
857e88ab-d98c-4399-a6d8-aa5a9becfc27
பேங்காக்கில் பங்ளாதேஷ் இடைக்காலத் தலைவர் முகம்மது யூனுசும் (இடது) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேசினர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

பேங்காக்: தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை நடந்த வட்டார அளவிலான சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பங்ளாதேஷ் அரசின் இடைக்காலத் தலைவர் முகம்மது யூனுசைச் சந்தித்துப் பேசினார்.

கடந்த ஆண்டு பங்ளாதேஷ் பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசினா விலக்கப்பட்ட பிறகு இவ்விரு தலைவர்களும் சந்தித்துக்கொண்டது இதுவே முதன்முறை.

ஹசினா பிரதமராக இருந்தபோது இந்தியா - பங்ளாதேஷ் இடையே மேம்பட்ட உறவு நீடித்தது. ஆயினும், மாணவர் போராட்டங்களால் வெடித்த புரட்சியை அடுத்து, ஹசினா தம் நாட்டைவிட்டுத் தப்பியோடி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன்பின் அவ்விரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

மாறாக, பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் பங்ளாதேஷ் நெருக்கம் காட்டி வருகிறது.

இந்நிலையில், பேங்காக்கில் நடந்த ‘பிம்ஸ்டெக்’ உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டபோது முகம்மது யூனுசும் மோடியும் சந்தித்துப் பேசினர்.

தாய்லாந்து, பூட்டான், மியன்மார், நேப்பாளம், இலங்கை ஆகிய நாடுகளும் அந்த உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டன.

ஹசினாவிற்கு அடைக்கலம் அளித்ததற்காக இந்தியா மீதான பங்ளாதேஷ் மக்களின் நல்லெண்ணம் மாறி வருவதாகச் சொல்லப்படுகிறது. விசாரணைக்காக அவரைத் திருப்பியனுப்ப வேண்டும் என்ற பங்ளாதேஷின் கோரிக்கைக்கு இந்தியா செவிசாய்க்கவில்லை.

அதே நேரத்தில், பங்ளாதேஷில் சிறுபான்மையினராக உள்ள இந்துகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் யூனுஸ் பொறுப்பேற்ற பிறகு இந்துக்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்தியா கூறி வருகிறது.

ஆனால், அதனை மறுத்துள்ள பங்ளாதேஷ், வன்முறை மிகைப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அது இனம் தொடர்பான பிரச்சினையன்று எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், மோடி-யூனுஸ் இடையிலான சந்திப்பு, இருநாடுகளுக்கு இடையிலான உறவுச் சீரமைப்பின் தொடக்கமாக இருக்கும் என நம்புவதாக ‘அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன்’ என்னும் இந்திய ஆய்வுக்குழுவின் தலைவர் ஹர்ஷ் பன்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இப்போதைய சூழலில், இருநாடுகளுக்கு இடையிலான உறவை நிலைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, பேங்காக்கிலிருந்து புறப்பட்ட மோடி வெள்ளிக்கிழமை மாலையில் இலங்கை சென்றடைவார். அனுர குமார திசநாயக்க இலங்கை அதிபராகப் பதவியேற்றபின் அங்கு செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்