புதுடெல்லி: ஈரானில் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய நிலையில், ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 25) தொலைபேசியில் பேசினார்.
இஸ்ரேல்-ஈரான் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதலில் இறங்கியது. ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியது.
இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதட்டம் நிலவிவரும் நிலையில், ஈரானிய அதிபர் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
ஈரானில் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் வான் தாக்குதல்கள் குறித்த தன் கவலைகளை ஈரானிய அதிபரிடம் பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.
“மத்திய கிழக்கில் பதட்டத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் மோதல்களை தீர்க்க, அரசதந்திர அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்,” என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.