கொழும்பு: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இத்தகவலை இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை மூன்று முறை இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அனுர குமார திசநாயகே இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டபோது, மோடியின் இலங்கை வருவது குறித்து உறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
“அண்டை நாடான இந்தியாவுடன் நெருங்கிய நட்பை பேணி வருகிறோம். இந்தியாவுக்கான எனது முதல் சுற்றுப் பயணத்தின்போது இருநாட்டு ஒத்துழைப்பு தொடர்பாகப் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
“இந்திய பிரதமர் மோடி இலங்கை வரும்போது, இரு நாடுகளுக்கு இடையில் புதிய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இலங்கையின் நலனைப் பேணும் விதமாக வெளிநாட்டு கொள்கையில் எந்தவொரு நாட்டிற்கும் ஆதரவாக இல்லாமல் தொடர்ந்து நடுநிலையாக செயல்படுவோம்,” என அமைச்சர் விஜிதா ஹெராத் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு இலங்கை மின்சார வாரியமும் இந்தியாவின் என்டிபிசி-யும் (NTPC) இணைந்து கிழக்கு திருகோணமலையின் சம்பூர் நகரில் 135 மெகாவாட் சூரிய மின் நிலையம் கட்ட ஒப்புக்கொண்டன என்றும் பிரதமர் மோடியின் பயணத்தின்போது இந்த சூரிய மின் நிலையம் திறந்து வைக்கப்பட இருப்பதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.