புதுடெல்லி: ரயில் பயண முன்பதிவை எளிமையாக்கும் வகையில் ‘ஆஸ்க்திஷா’ என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது இந்தியன் ரயில்வே.
இதற்காக உருவாக்கப்பட்ட புதிய மெய்நிகர் உதவியாளருடன் பயணிகள் உரையாட இயலும். இதன் மூலம் ரயில் பயணத்துக்கான முன்பதிவு, ரத்து செய்தல் ஆகியவை எளிதில் முடிந்துவிடும்.
இதற்கான செயலியை பயணிகள், ஐஆர்சிடிசி (IRCTC) என்ற ரயில்வே இணையத்தளம் அல்லது கைப்பேசி மூலம் பயன்படுத்தலாம்.
குரல் அடிப்படையிலான கட்டளைகள் மூலம் தகவல்களை வழங்குவது இதன் சிறப்பு. தற்போது, ஆங்கிலம், இந்தி, குஜராத்தி மொழிகளில் மட்டுமே மெய்நிகர் உதவியாளருடன் தகவல் பரிமாற்றம் செய்யப்படும் என்றும் வருங்காலத்தில் மேலும் பல மொழிகள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மெய்நிகர் உதவியாளர் ஏற்பாட்டின் மூலம், எதிர்காலத்தில் முன்பதிவை விரைவுபடுத்த பயணிகளின் விவரங்களையும் சேமிக்க இயலும்.