மேம்படுத்தப்பட்ட ரயில்வே இணையத்தளம் ஜூலை 15க்குள் பயன்பாட்டுக்கு வரும்

மேம்படுத்தப்பட்ட ரயில்வே இணையத்தளம் ஜூலை 15க்குள் பயன்பாட்டுக்கு வரும்

1 mins read
1e77be53-a3dd-4306-951c-c694d6e48f14
இந்தியாவின் அவுரங்காபாத்தில் முகுந்தவாடி ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும் ரயில். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெய்ப்பூர்: புதிய, மேம்படுத்தப்பட்ட இந்திய ரயில்வே உணவு, சுற்றுலாக் கழக (ஐஆர்சிடிசி) இணையத்தளம் ஜூலை 15க்குள் பொதுமக்களுக்கு அறிமுகம் காணும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் மாணவர்களுடன் உரையாடியபோது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தப் புதிய இணையத்தளத்தைப் பற்றித் திரு வைஷ்ணவ், ரயில்வே அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டு பேசிய உரையாடலின் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

நாடு முழுவதும் ரயில் பயணங்களை முன்பதிவு செய்ய நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் அதிகாரபூர்வ ரயில்வே இணையத்தளத்தில் உள்ள பிரச்சினை குறித்து மாணவர் ஒருவர் புகார் அளிப்பதுடன் அந்தக் காணொளி தொடங்குகிறது.

புதிய இணையத்தளம் வர வேண்டும் என்று மாணவர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்திருப்பது பற்றிக் குறிப்பிட்ட திரு வைஷ்ணவ், 30 நாள்களுக்குள் புதிய இணையத்தளத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியுமா என்று ரயில்வே அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து, ஜூலை 15க்குள் புதிய இணையத்தளம் தொடங்கப்படும் என்று மாணவர்களிடம் திரு வைஷ்ணவ் தெரிவித்தார். இது மாணவர்களிடையே ஆரவாரத்தையும் நன்றியுணர்வையும் ஏற்படுத்தியது.

உச்ச நேரங்களில் இணையத்தளம் முடங்குவது, செயலிழப்பது ஆகியவற்றுக்காகத் தற்போதைய இணையத்தளம் நீண்ட காலமாகவே விமர்சிக்கப்பட்டு வருகிறது. முன்பதிவுகளின்போது ஏற்படும் ‘ஓடிபி’ பிரச்சினைகள், அதிகப் பயன்பாட்டால் ஏற்படும் நெரிசல் ஆகியன பயணிகளின் முக்கியப் புகார்களாக நீடிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்