புதுடெல்லி: இந்திய ரயில்வே துறையை மேம்படுத்துவதற்கு வகைசெய்யும் ரயில்வே மசோதா 2024 நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதத்திற்குப்பின் குரல் வாக்கெடுப்பு மூலம் அம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்திய ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், அப்படியொரு திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்றும் ரயில்வே துறை ஒருபோதும் தனியார்மயமாக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் விளக்கம் கோரி இருந்தன. இந்நிலையில், ரயில்வே சட்டத் திருத்த முன்வரைவு மீதான விவாதத்தின்போது விளக்கம் அளித்தார் மத்திய அமைச்சர்அஸ்வினி.
அப்போது, “ரயில்வே தனியார்மயமாக்க வழிவகுக்கும் என ஒருசில உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
“ஆனால், இது தவறான கருத்தாகும். ரயில்வே துறை ஒருபோதும் தனியார்மயம் ஆக்கப்படாது.
“இது தொடர்பாக தவறான கருத்துகளைப் பரப்புவோரிடம், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்,” என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேட்டுக்கொண்டார்.

