மும்பை: இந்திய ரூபாயின் மதிப்பு திங்கட்கிழமையன்று (அக்டோபர் 14) இதற்குமுன் இல்லாத அளவு வீழ்ச்சியடைந்தது.
ஓர் அமெரிக்க டாலருக்கு 84.0725 இந்திய ரூபாய் என்ற அளவிற்கு அம்மதிப்பு கீழிறங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு டாலருக்கு 84.07 ரூபாய் எனச் சரிவுகண்டிருந்தது.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக 84 ரூபாயை ஒட்டியிருந்த நிலையில், இப்போது அது 84 ரூபாயைத் தாண்டிவிட்டது.
கடந்த பத்துப் பருவங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏறக்குறைய 8 பில்லியன் அமெரிக்க டாலரை மீட்டுக்கொண்டதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
திங்கட்கிழமையன்று மற்ற ஆசிய நாணயங்களின் மதிப்பு சற்று வீழ்ச்சி கண்டது. 0.1% முதல் 0.3% வரை என்ற அளவிற்கு அச்சரிவு இருந்தது.
அதேநேரத்தில் டாலர் குறியீடு 103 என்ற நிலையில், கிட்டத்தட்ட கடந்த இரு மாத காலத்திற்கான உச்ச அளவை ஒட்டியிருந்தது.
“வரும் நாள்களில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 83.95 - 84.20 என்ற அளவிலேயே நீடிக்கலாம்,” என்று வெளிநாட்டு வங்கியைச் சேர்ந்த விலைஞர் (trader) ஒருவர் கூறினார்.
உள்நாட்டுத் தனியார் வங்கிகளும் அரசாங்க வங்கிகளும் அமெரிக்க டாலர் விற்றதையும் வெளிநாட்டு வங்கிகள் அவற்றை வாங்குவதற்கான ஏலத்தில் ஆதிக்கம் செலுத்தியதையும் காணமுடிந்ததாக அவர் சொன்னார்.

