புதுடெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் டோனல்ட் டிரம்ப் ஏறுமுகத்தில் இருந்ததை அடுத்து, புதன்கிழமையன்று (நவம்பர் 06) அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைந்தது.
மாறாக, அதற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதற்குமுன் இல்லாத அளவிற்கு, அதாவது ஒரு டாலருக்கு 84.25 ரூபாய் எனச் சரிவு கண்டது. பின்னர் அது சற்றே மீண்டு, ஒரு டாலருக்கு 84.18 ரூபாய் என்றானது.
உள்நாட்டு உட்கட்டமைப்பிற்கு டிரம்ப் முன்னுரிமை அளிப்பார் என்பதால், நிதி வரம்புகள் கூடி கடன் தேவைகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடந்த ஜூலையில் இருந்த அளவிற்கு டாலரின் மதிப்பு உயர்ந்துவிட்டது.
இதற்கிடையே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. இது வளர்ந்துவரும் சந்தைகள் எதிர்கொள்ளும் சவாலான சூழலை வெளிப்படுத்துவதாக உள்ளது.
அமெரிக்க நிதிக் கொள்கை இறுக்கம், ஏற்றத்தாழ்வுமிக்க உலகச் சந்தை போன்ற புறச்சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களும் இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
கடந்த காலத்தில், ரூபாய் மதிப்பை நிலைப்படுத்துவதற்கு அந்நியச் செலாவணிச் சந்தையில் இந்திய ரிசர்வ் வங்கி தலையிட்டது. அதுபோல, இப்போதும் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடையுமானால், இம்முறையும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.