அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு முதன்முறையாக 89 ரூபாயைத் தொட்டது

இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வீழ்ச்சி

2 mins read
74a3bb98-4004-4838-9b5b-3c7ed78e72a4
வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) ஒரே நாளில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87 காசு குறைந்தது. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: வரலாற்றில் இதற்குமுன் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுகண்டுள்ளது.

முதன்முறையாக, ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு 89 ரூபாயைத் தாண்டியது.

கடந்த மூன்று மாதங்களில் இல்லாத சரிவாக வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) ஒரே நாளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87 காசு குறைந்து, 89.55 எனப் பதிவானது. நாளின் நடுவே அது 89.61 ரூபாய் என இன்னும் மோசமான நிலையை எட்டி, பின்னர் சற்றே மீண்டது.

இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி ஓர் அமெரிக்க டாலருக்கு 88.85 ரூபாய் என்ற நிலையை எட்டியதே முந்திய சாதனை. கடந்த ஜூலை 30ஆம் தேதி அதன் மதிப்பு 90 காசு இறங்கியதே வீழ்ச்சியில் ஒருநாள் சாதனை என்று பிடிஐ செய்தி தெரிவித்தது.

ஏற்றுமதியாளர்களிடமிருந்து டாலர் வரத்து வலுவாக இல்லாததும் இறக்குமதியாளர்கள் இழப்பு ஏற்படாத வகையில் வணிகம் செய்ய முயல்வதும் ரூபாய் மதிப்பு சரிவிற்குச் சில காரணங்கள் என்று வணிகர்களைச் சுட்டி, சிஎன்பிசி செய்தி வெளியிட்டுள்ளது.

கூடிய விரைவில் ஓர் அமெரிக்க டாலருக்கு 90 ரூபாய் என்ற நிலை ஏற்படும் என எதிர்பார்ப்பதாக ‘யா வெல்த் குளோபல்’ ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் அனுஜ் குப்தா கூறியதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய ஏற்றுமதிப் பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்ததிலிருந்தே இந்திய ரூபாயின் மீதான அழுத்தம் நீடிக்கிறது.

இவ்வாண்டில் மோசமாகச் செயல்படும் ஆசிய நாணயங்களில் இந்திய ரூபாயும் ஒன்றாக விளங்குகிறது. ராய்ட்டர்ஸ் செய்தியறிக்கையின்படி, இந்தியப் பங்குகளிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் இவ்வாண்டில் மட்டும் இதுவரை 16.5 டாலரை மீட்டுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்