புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவைச் சந்தித்து, முதன்முறையாக 85 ரூபாயைத் தாண்டியுள்ளது.
வியாழக்கிழமை (டிசம்பர் 19) மட்டும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 12 காசு சரிந்து, ஒரு டாலருக்கு 85.0675 என்ற நிலைக்குத் தாழ்ந்ததாக ‘மின்ட்’ செய்தி தெரிவித்தது.
முன்னதாக, புதன்கிழமையன்று ஒரு டாலருக்கு 84.9525 ரூபாய் என முடிந்தது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பானது இரண்டு மாதங்களிலேயே 84லிருந்து 85 என்றானது. முன்னதாக, 83லிருந்து 84ஐ எட்ட 14 மாதங்களும், 83லிருந்து 84க்கு இறங்க பத்து மாதங்களும் ஆனதாக ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், வரும் நாள்களில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 84.70 - 85.20 என்ற அளவில் இருக்கலாம் என்று சிஆர் ஃபாரக்ஸ் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அமித் பபாரி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 85.35 வரை இறங்கலாம் என்பது எம்கே குளோபல் நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் ரியா சிங்கின் கணிப்பு.
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதற்கு உலகளாவிய சூழலும் உள்ளூர்ச் சூழலும் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
முந்திய ஏழு காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு, 2024 ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி குறைந்தது. அதே நேரத்தில், வணிகப் பற்றாக்குறை அதிகரித்தது. நாட்டிற்கான மூலதன வரத்தும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதே நேரத்தில், அமெரிக்க டாலர் தொடர்ந்து வலுவடைந்து வருவதும் ரூபாய் மதிப்புச் சரிவிற்கு இன்னொரு காரணம். துடிப்பான அமெரிக்கப் பொருளியல் கொள்கைகளால் அந்நாட்டு நாணயம் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தென்கொரிய வோன், மலேசிய ரிங்கிட், இந்தோனீசிய ரூப்பியா ஆகிய ஆசிய நாணயங்களின் மதிப்பும் 0.8% முதல் 1.2% வரை சரிந்தன.

