வீழ்ச்சியில் சாதனை நிகழ்த்தும் இந்திய ரூபாய்: 1 அமெரிக்க டாலர் ரூ.95.40

வீழ்ச்சியில் சாதனை நிகழ்த்தும் இந்திய ரூபாய்: 1 அமெரிக்க டாலர் ரூ.95.40

1 mins read
960165cd-24d7-40ac-a592-febd6b474fff
ஈரான் போரால் 95க்கு மேல் சென்ற ரூபாயின் மதிப்பு, அண்மை வாரங்களாக அதிலிருந்து இறங்கவில்லை. - படம்: சிஎன்பிசி

புதுடெல்லி: ஈரான் போரில் பதற்றம் நீடிப்பதைத் தொடர்ந்து, இந்திய ரூபாயின் மதிப்பு செவ்வாய்க்கிழமை (மே 5) வரலாறு காணாத சரிவைச் சந்தித்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கியது ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.3% வீழ்ந்து, 95.40 ரூபாயாக இருந்தது.

கடந்த வாரம் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) ரூபாயின் மதிப்பு 95.33 என்று சரிந்ததே வரலாற்று வீழ்ச்சி எனப் பதிவான நிலையில், செவ்வாய்க்கிழமை அது மேலும் சரிந்து அதலபாதாளத்திற்குச் சென்றது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்திருக்கும் போருக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்துவிட்டது. அது ஒருபுறம் பொருளியல் சிரமங்களுக்குக் காரணமாக இருக்கும் நிலையில், எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் இந்தியப் பொருளியல் எதிர்கொள்ளக்கூடிய அபாயங்கள் குறித்த கவலையும் அதிகமாகி உள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் மேலும் சரிவதற்கு இவையே முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

எண்ணெய் விலை மாற்றங்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இந்தோனீசிய நாணயமான ரூப்பியாவும் பிலிப்பீன்சின் பெசோவும் செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தன.

வளைகுடா வட்டார மோதல்களும் போர்நிறுத்தம் ஏற்படாத சூழ்நிலையும் முதலீட்டாளர்களைப் பதற்றத்தில் வைத்துள்ளன.

மோதல் முடிவுக்கு வராத நிலையில், எரிசக்தி விலைகள் உயர்ந்துகொண்டே சென்றால், இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மேலும் விரிவடையும் எனப் பொருளியல் பகுப்பாய்வாளர்கள் கணித்துள்ளனர்.

அந்த நிலைமை நாட்டின் பொருளியல் வளர்ச்சியை மந்தமடையச் செய்வதோடு பணவீக்கத்தையும் அதிகரித்துவிடும் என்பது அவர்களின் எச்சரிக்கைத் தகவலாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்