புதுடெல்லி: ஈரான் போர்ப் பதற்றம் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்தது.
புதன்கிழமை (மார்ச் 4) காலை ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.0550 என்ற அளவிற்குக் குறைந்தது. இதற்குமுன் கடந்த ஜனவரி மாதத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 91.9875 என்ற அளவில் இறக்கம் கண்டிருந்தது.
ஈரான் போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, பாதுகாப்பான முதலீடு நோக்கிய நகர்வு ஆகியவையே அதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது.
மத்திய கிழக்கில் பதற்றம் தணியும்வரை இந்திய ரூபாயின் மீதான அழுத்தம் தொடர்ந்து, அதன் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையலாம் என்று பொருளியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
தன்மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல்கள் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. அதனால், கப்பல் போக்குவரத்து தடைபட, கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்குக் கிட்டத்தட்ட 85 அமெரிக்க டாலராக உயர்ந்ததால், இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கான அபாயங்கள் அதிகரித்துள்ளன. இதனால், ரூபாய் மதிப்பு சரிவுகண்டு வருகிறது.
இவ்வாண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு விழுக்காட்டிற்குமேல் சரிந்து, வளரும் நாடுகளில் மோசமாகச் செயல்படும் நாணயத்தைக் கொண்டுள்ள நாடாக விளங்குகிறது.

