தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘டிரோன்’ எதிர்ப்பு ஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்திய இந்திய விஞ்ஞானிகள்

1 mins read
781b2bc5-930b-4807-b35c-1835682a6c5b
இந்தியாவின் தற்காப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டிரோன்களை அழிக்கும் புதிய ஆயுதத்தை வடிவமைத்து சோதித்துப் பார்த்துள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். - படம்: ஊடகம்

புதுடெல்லி: எதிரிகளின் ஆளில்லா வானூர்திகளை (டிரோன்) துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, ஆயுதத்தைப் பரிசோதிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

இதற்காக லேசர் அடிப்படையிலான ஆயுத அமைப்பு பயன்படுத்தப்பட்டதாகவும், சோதனையின்போது பல டிரோன்களையும் எதிரிகளின் கண்காணிப்பு உணர்திறன் கொண்ட கருவிகளையும் இந்தப் புதிய ஆயுதம் வெற்றிகரமாகத் தாக்கி அழித்ததாக இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்தியாவின் தற்காப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation) டிரோன்களை அழிக்கும் புதிய ஆயுதத்தை வடிவமைத்து சோதித்துப் பார்த்துள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“இந்த அதிநவீன அமைப்பு, சில வினாடிகளில் பறக்கும் டிரோன்களை துல்லியமாக அழிக்கும் திறன் கொண்டது. லேசர் அடிப்படையிலான ஆயுத அமைப்பின் தொழில்நுட்பம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய சில நாடுகளில் மட்டுமே உள்ளன.

“தற்போது இந்தியாவும் அந்நாடுகளுடன் இணைந்துள்ளது. இந்த அமைப்பு முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாகும்,” என்று டிஆர்டிஓ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் சென்று இலக்கைத் தாக்கும் இந்த அமைப்பை குறைந்த செலவில் உருவாக்க இயலும் என்றும் ஒருமுறை எதிரியைத் தாக்கும் ஏவுகணையைச் செலுத்த சில லிட்டர் பெட்ரோல் வாங்குவதற்கு இணையான செலவு மட்டுமே ஏற்படும் என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்