புதுடெல்லி: மத்திய கிழக்குப் போருக்குப் பிறகு பணி நிமித்தம் வளைகுடா நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல இந்தியக் கடலோடிகள் அஞ்சுவதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
போரின் தீவிரம் காரணமாக பல மாதங்கள் ஹோர்முஸ் நீரிணையில் ஆயிரக்கணக்கான இந்தியக் கடலோடிகள் சிக்கித் தவித்தனர். அதன் பின்னர் பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர்.
எனினும், வேலை வாய்ப்புக்காக மீண்டும் அங்கு செல்வதில் பலருக்கு உடன்பாடில்லை. ஆனால் வேறு வழியில்லை என்பதால் அவர்கள் அச்சத்தில் இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவிக்கிறது.
உலகளாவிய அளவில் வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு அதிக எண்ணிக்கையிலான கடலோடிகளைத் தயார்செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
அமெரிக்கா, ஈரான் இடையேயான போர்க்காலத்தில் மத்திய கிழக்குப் பகுதியில் கப்பல் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளானது.
இந்தியக் கடலோடிகளில் இருந்த கப்பல்கள் தாக்கப்பட்டன. அப்போது உடன் பணியாற்றிய சிலர் கொல்லப்பட்டதையும் காயமடைந்ததையும் சில இந்தியக் கடலோடிகள் மறக்கவில்லை.
போர் நிறுத்தம் தொடர்பாக இடைக்கால ஒப்பந்தம் ஏற்பட்டாலும் அவ்வப்போது தாக்குதல்கள் நிகழ்வதும், ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் நிலவுவதும் கடலோடிகளை இன்னும் அச்சத்தின் பிடியிலேயே வைத்துள்ளது.
போர் தொடங்கியது முதல் இந்நாள் வரை ஆயிரக்கணக்கான இந்தியக் கடலோடிகள் வளைகுடா நாடுகளில் இருந்து வெளியேறி விட்டனர். அவர்களில் ஏறக்குறைய 3,600க்கும் மேற்பட்டோர் இந்தியக் கப்பல் போக்குவரத்து அமைச்சின் உதவியுடன் வெளியேறியவர்களாவர்.
அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில், தாம் எதிர்கொண்ட அனுபவம் பயங்கரமானது என்று குஜராத் மாநிலத்திலுள்ள சிறிய மீனவ கிராமத்தைச் சேர்ந்த 37 வயதான சீதாராம் டாண்டேல் கூறியுள்ளார்.
மீண்டும் பணிக்குத் திரும்ப முடியாத அளவிற்கு மனத்தை அச்சம் ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டு தரவுகளின்படி உலகம் முழுவதும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்துத் துறையில் ஏறக்குறைய 3,20,000 இந்தியக் கடலோடிகள் பணிபுரிந்து வருவதாக இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 45 வயதான ரதீசன் குட்டியன் பதற்றம் குறைந்து, சூழல் மேம்பட்டால் மட்டுமே மீண்டும் பணிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
தனெல் ஹிரேன்குமார் பிரவீன்பாய் என்ற 42 வயதான கடலோடி கடந்த பிப்ரவரி மாதம் ஹோர்முஸ் நீரிணையில் சிக்கித் தவித்த 20,000 இந்தியக் கடலோடிகளில் தானும் ஒருவர் என்று குறிப்பிட்டார்.
தாம் இருந்த பனாமா கொடியேற்றப்பட்ட எண்ணெய்க் கப்பலுக்கு அருகே ஹெலிகாப்டர் ஒன்று எரிந்து நொறுங்கியது என்றும், கப்பலுக்கு அருகே பல ஏவுகணைகள் சீறிப்பாய்ந்து செல்வதைக் காண நேரிட்டது என்றும் தனது அனுபவத்தை விவரித்துள்ளார்.
இனி ஒருபோதும் ஹோர்முஸ் நீரிணைக்கு திரும்ப போவதில்லை என்றும் தன் உயிரை விட பணம் பெரிதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

