புதுடெல்லி: சவூதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்தியருக்குத் திங்களன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவுக்குள் ‘மெத்தம்பெட்டமைன்’ கடத்திய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட இந்தியர் ஒருவருக்கு அந்நாட்டின் உள்துறை அமைச்சு திங்களன்று மரண தண்டனையை நிறைவேற்றியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாநிலத்தின் தம்மாம் நகரில் லவ்லி ராணா என்ற இந்தியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளைக் கடத்திய குற்றச்சாட்டின்கீழ், இந்தியாவைச் சேர்ந்த லவ்லி ராணா என்பவரைப் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் விசாரணை நடத்தப்பட்டு அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் ராணா மீதான குற்றத்தை உறுதிசெய்து தீர்ப்பளித்தது. இஸ்லாமிய சட்டப்படி தண்டனையை நிறைவேற்றுவதற்கான அரச ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.
சவூதி அரேபியாவில், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை மூளைச் சலவை செய்து பெரிய போதைப்பொருள் கும்பல்கள் அந்நாட்டுக்குள் போதைப் பொருள்களைக் கடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதில் பிடிபடும் நபர்கள், கடுமையான தண்டனைகளை அனுபவித்து வருகின்றனர்.


