புதுடெல்லி: செங்கடலில் ஏமன் கடலோரப் பகுதிக்கு அருகே செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) தாக்குதலுக்கு உள்ளான இந்தியக் கொடி தாங்கிய வணிகக் கப்பல் கடலில் மூழ்கியது. இருப்பினும்,
கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் உட்பட 14 ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான ‘எம்எஸ்வி பைஸ் நூரே ஒலியா’ எனும் அந்த வணிகக் கப்பல் மீதான தாக்குதலை வெளியுறவு அமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளது. சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், ஏமனிய அதிகாரிகளுடன் இணைந்து ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்குத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மீட்கப்பட்ட கடலோடிகள் அனைவரும் ஏமன் கடலோரக் காவற்படையினரால் மோக்கா துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இத்தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த மீட்பு நடவடிக்கைக்கு உதவிய ஏமன் அதிகாரிகளுக்கு வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நன்றி தெரிவித்துக்கொண்டார்
அப்பகுதியில் வணிகக் கப்பல்கள்மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள் மிகுந்த கவலையளிப்பதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது. அனைத்துலக நீர்வழிகளில் தடையில்லாப் போக்குவரத்தையும் வணிகத்தையும் மீட்டெடுக்கவும், வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்தியக் கடலோடிகளின் பாதுகாப்பிற்கு அரசு மிகுந்த முன்னுரிமை அளிப்பதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு வட்டாரத்தில் இயங்கும் இந்தியக் கடலோடிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கடல்சார் நிர்வாகத் தலைமை இயக்குநருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மீட்கப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சோனோவால் உறுதியளித்துள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, செங்கடல் பகுதியில் செல்லும் அனைத்து வணிகக் கப்பல்களும் கூடுதல் விழிப்புநிலையுடனும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடனும் இயங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வட்டாரத்தில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், அனைத்துலகக் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளுடனும் இந்தியா தொடர்ந்து கலந்தாலோசித்து வருகிறது.


