புதுடெல்லி: இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜஸ்பால் ராணா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 49.
ஜெர்மனியின் மூனிக் நகரில் நடைபெற இருக்கும் உலகக்கிண்ணத் தொடருக்காக இந்திய அணியுடன் சென்றிருந்த அவருக்கு அங்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அதனால், சில நாள்களுக்கு முன்னர் அவர் அவசரமாக நாடு திரும்பினார். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராணா வியாழக்கிழமை (ஜூன் 11) இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டது.
அவரது மறைவை தேசிய துப்பாக்கிச் சுடும் சங்கம் உறுதி செய்துள்ளது. அவரது திடீர் மரணம் இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் உட்பட பல்வேறு இந்திய வீரர்களுக்குப் பயிற்சியாளராகத் திகழ்ந்த ஜஸ்பால் ராணாவின் மறைவு இந்திய துப்பாக்கிச் சுடுதல் சங்கத்துக்குப் பேரிழப்பாகப் பார்க்கப்படுகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவ ராணா, 1990களில் துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற அவர், இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணியின் பயிற்றுநராக இருந்து வந்தார்.
1994, 1998, 2002 மற்றும் 2004 ஆகிய நான்கு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டித் தொடர்களில் இந்திய அணிக்காக 9 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 15 பதக்கங்களைக் குவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிகப் பதக்கங்களை வென்று தந்த வீரர் என்ற சாதனையையும் ராணா படைத்திருந்தார்.


