புதுடெல்லி: தங்கள் நாட்டிலிருந்து இஸ்ரேலுக்குக் கள்ளத்தனமாகச் செல்ல முயன்ற இந்திய ஆடவர் ஒருவரை ஜோர்தானியப் படைவீரர்கள் சுட்டுக்கொன்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொல்லப்பட்டவர் கேரள மாநிலம், தும்பாவைச் சேர்ந்த தாமஸ் கேப்ரியல் பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
‘துரதிர்ஷ்டவசமான சூழலில் இந்திய நாட்டவர் ஒருவர் உயிரிழந்த துயர நிகழ்வு’ குறித்துத் தான் அறிந்துள்ளதாக ஜோர்தானிலுள்ள இந்தியத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 2) தெரிவித்தது.
மாண்டவரின் குடும்பத்தாருடன் தொடர்பில் இருக்கிறோம் என்றும் அவரின் உடலை இந்தியாவிற்கு எடுத்துச் செல்வது தொடர்பில் ஜோர்தானிய அதிகாரிகளுடன் அணுக்கமாக இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்றும் தூதரகம் தனது எக்ஸ் பக்கம் வழியாகத் தெரிவித்துள்ளது.
வருகை விசாவில் ஜோர்தான் சென்ற 47 வயது கேப்ரியல், அங்கிருந்து இஸ்ரேல் செல்ல முயன்றதாக அறியப்படுகிறது.
இந்நிலையில், “கடைசியாக அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது இரு நிமிடங்கள்தான் பேசினார். தனக்காக வேண்டிக்கொள்ளுமாறு மட்டும் கேட்டுக்கொண்டார்,” என்று கேப்ரியலின் மனைவி கூறியதாக ‘ஏஎன்ஐ’ செய்தி வெளியிட்டுள்ளது.
ஜோர்தானுக்குச் செல்லுமுன் கேப்ரியல் இந்தியாவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டிக்கொண்டிருந்ததாக உள்ளூர் ஊராட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
மீனம்குளத்தைச் சேர்ந்த எடிசன் என்ற அவரது உறவினரும் அவருடன் இஸ்ரேல் செல்ல முயன்றார். ஜோர்தானியப் படையினர் சுட்டதில் அவரும் காயமடைந்தார். ஆயினும், உயிர்பிழைத்த அவர் சிகிச்சைக்குப்பின் இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இஸ்ரேல்-ஹமாஸ் போரை அடுத்து, மேற்குக் கரைப் பகுதியில் வன்முறை அதிகரித்துவரும் நிலையில், இந்தியர்கள் இருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

