பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய படை வீரர் இந்தியாவிடம் ஒப்படைப்பு

1 mins read
3b1b2aa6-d172-4e12-b2d4-636cfe610abb
வாகா எல்லையில் பாகிஸ்தான் ஒப்படைத்த இந்திய வீரர் பூர்ணம் குமார் ஷா (நடுவில்) உடன் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஜவான் பூர்ணம் குமார் ஷா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கடந்த ஏப்ரல் 23 முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் காவலில் இருந்தார் பூர்ணம் குமார்.

இந்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக, அவர் நேற்று (மே 14) காலை 10.30 மணியளவில் அட்டாரி வழியாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த ஒப்படைப்பு அமைதியாகவும் நெறிமுறைகளின்படியும் நடந்ததாக இந்திய ராணுவத் தரப்பு தெரிவித்தது.

முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய பதற்றமான சூழலுக்கு மத்தியில், பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் பகுதியில் அனைத்துலக எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார் பூர்ணம் குமார் ஷா.

அவர் எல்லை தாண்டி பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்ததாகக் குற்றம்சாட்டி பாகிஸ்தான் கைது செய்தது.

பூர்ணம் குமார் கடந்த 17 ஆண்டுகளாக எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருகிறார்.

அவரை உடனடியாக மீட்கக் கோரி மனைவியும் குடும்பத்தினரும் இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். பூர்ணம் குமார் மனைவி தற்போது தாய்மை அடைந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 20 நாள்களுக்கும் மேலாக பாகிஸ்தான் காவலில் இருந்த பூர்ணம் குமார் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்