ஸ்ரீநகர்: இந்தியாவின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் மச்சர் பகுதிக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க இந்திய ராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டபோது, இந்திய ராணுவச் சாவடி மீது பாகிஸ்தானின் எல்லைப் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது.
இந்தியத் தரப்பிடமிருந்து எவ்வித தூண்டுதலும் இன்றி இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் இந்திய ராணுவ வீரர் மோஹித் ராத்தோர் உயிரிழந்ததுடன் ராணுவ மேஜர் ஒருவரும் மூன்று ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.
இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்தியதில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் இந்திய நேரப்படி ஜூலை 27ஆம் தேதி அதிகாலை நிகழ்ந்தது.
ஜூலை மாதம், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் காரணமாக இதுவரை 12 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

