துபாய்: உரிய ஆவணங்களின்றிப் பல மாதங்களாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) தவித்த இந்தியர், உள்ளூர் சமூக ஊழியர்களின் உதவியால் தாய்நாடு திரும்பினார்.
கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர் முசின், 49. அவர் இவ்வாண்டு மார்ச் மாதம் சுற்றுப்பயண விசாவில் யுஏஇ சென்றார். அங்கு தமது பை தொலைந்துபோய்விட்டது என்றும் அதில்தான் தமது கடப்பிதழும் மற்ற ஆவணங்களும் இருந்தன என்றும் அவர் கூறினார்.
இதனையடுத்து, விசா அனுமதி தாண்டி கூடுதல் காலத்திற்குத் தங்கியிருந்ததால் முசினுக்கான அபராதமும் கூடிக்கொண்டே போனது. இந்தியா திரும்பவும் அவர் வழியின்றித் தவித்தார்.
தங்குமிடத்திற்கான வாடகையும் செலுத்த முடியாததால் அவர் வெளியேற்றப்பட்டார்.
அங்குள்ள பூங்கா ஒன்றில் இருந்த முசினை உள்ளூர் சமூக ஊழியர்கள் கண்டு, உதவி புரிந்ததாக கலீஜ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.
அவர்களின் முயற்சியால், முசினுக்குக் கூடுதல் காலம் தங்கியிருந்ததற்காக விதிக்கப்பட்ட அபராதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
அத்துடன், முசினுக்குக் காவல்துறை அனுமதிக் கடிதமும் தேவையான மற்ற சான்றிதழ்களும் பெற்றுத் தரப்பட்டன.
அந்தச் சமூக ஊழியர்களே முசினுக்கான விமானப் பயணச்சீட்டையும் வாங்கி, அண்மையில் அவரைக் கேரளத்திற்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, விசா முடிந்த பின்னரும் கூடுதல் காலம் தங்கியிருப்போர்க்கான அபராதத்தை யுஏஇ அண்மையில் மாற்றி அமைத்தது. புதிய விதிகளின்படி, அங்கு கூடுதல் காலம் தங்கி இருப்போர் நாளொன்றுக்கு 50 திர்ஹம் (S$18.6) அபராதம் செலுத்த வேண்டும்.

