அமெரிக்காவில் அரசு அதிகாரிபோல் நடித்து மோசடி செய்ய முயன்ற இந்திய மாணவர் கைது

1 mins read
d49ca562-730e-4550-9457-5a5568fadf89
கைதுசெய்யப்பட்ட கிஷன் குமார் சிங், 21. - படம்: எக்ஸ் / கில்ஃபர்ட் கவுன்டி காவல்துறை

நார்த் கேரலைனா: அமெரிக்காவில் அரசு அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் செய்து, 78 வயது மூதாட்டி ஒருவரை மோசடி செய்ய முயன்றதாகக் கூறி 21 வயது இந்திய மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகப்படும்படியான தொலைபேசி அழைப்புகள் வந்ததாகக் கூறி அம்மூதாட்டி புகாரளித்ததைத் தொடர்ந்து, கிஷன் குமார் சிங் என்ற அம்மாணவரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

சட்ட அமலாக்க அதிகாரிபோல் நடித்து கிஷன் குமார் அம்மூதாட்டியை ஏமாற்ற முயன்றதாகச் சொல்லப்படுகிறது.

“அம்மூதாட்டியின் விவரங்களைப் பயன்படுத்தி. அவரது வங்கிக் கணக்குகளில் வேறு யாரோ ஒருவர் நுழைந்து பயன்படுத்தி வருவதாக அவரிடம் கிஷன் சிங் கூறினார். அதனால், பாதுகாப்பாக வைத்திருப்பதற்காகப் பெருந்தொகையை உடனே தமது கணக்குகளிலிருந்து எடுக்குமாறும் கிஷன் அம்மூதாட்டியை வற்புறுத்தினார். அரசு அதிகாரி எனக் கூறிக்கொண்டு, அம்மூதாட்டியைக் காணச் சென்றபோது காவல்துறை சிங்கைக் கைதுசெய்தது,” என்று காவல்துறை விளக்கியது.

மேலும், நாட்டின் இன்னொரு பகுதியில் நிகழ்ந்த குற்றச் செயல் ஒன்றில் அம்மூதாட்டியின் பெயர் தொடர்புபடுத்தப்படுவதாகவும் அவரிடம் கிஷன் பொய்யுரைத்தார்.

அதனைத் தொடர்ந்து, அப்பெண் தமது வங்கிக் கணக்குகளிலிருந்து அவர் பெருந்தொகையை எடுத்துவிட்டார். அவரிடமிருந்து அப்பணத்தைப் பெற்றுக்கொள்ளச் சென்றபோது கிஷன் பிடிபட்டார்.

கிஷன் கடந்த 2024ஆம் ஆண்டிலிருந்து ஒகையோ மாநிலம், சின்சினாட்டி நகரில் வசித்துவந்ததாக உள்ளூர் ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.

முதியவர் ஒருவரை மோசடி செய்ததாகவும் திருட்டில் ஈடுபட்டதாகவும் கூறி, சென்ற மாதம் அமெரிக்காவில் மாணவர் விசாவில் இருந்த இரு இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்