மில்வாக்கி: அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் 27 வயது இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிரவீண் குமார் கம்பா, 27, என்ற அந்த இளையர் கொள்ளை முயற்சியின்போது சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது முன்பின் தெரியாத ஒருவர் பதிலளித்ததால் இந்தியாவிலுள்ளா அவரின் குடும்பத்தினர் பதற்றமடைந்தனர்.
அதன்பின்னர் நண்பர்கள், அமெரிக்க அதிகாரிகள் மூலமாக பிரவீணுக்கு நேர்ந்த துயரம் அவர்களுக்குத் தெரியவந்தது.
பிரவீணின் உடலைத் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருந்ததைக் கண்டதாக அவருடைய நண்பர்கள் கூறினர் என்று அருண் என்ற உறவினர் ஒருவர் சொன்னார். கடையில்தான் அவர் சுடப்பட்டதாக வேறு சிலர் கூறினர்.
இதனால், என்ன நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பிரவீணின் மரணத்திற்கு சிகாகோவிலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
“பிரவீணின் மரணம் மிகுந்த துயரமளிப்பதாக உள்ளது. விஸ்கான்சின் - மில்வாக்கி பல்கலைக்கழகத்தில் அவர் முதுநிலைப் பட்டம் பயின்று வந்தார். அவருடைய குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்,” என்று தனது எக்ஸ் பக்கம் வாயிலாகத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2023ஆம் ஆண்டு தரவு அறிவியலில் முதுநிலைக் கல்வி பயில்வதற்காக பிரவீண் அமெரிக்கா சென்றார். அங்குள்ள கடை ஒன்றில் அவர் பகுதி நேரமாக வேலை செய்துவந்த நிலையில், இத்துயரம் நேர்ந்துள்ளது.
முன்னதாக, கடந்த டிசம்பரிலும் தெலுங்கானாவைச் சேர்ந்த 22 வயது சாய் தேஜா என்ற மாணவர், சிகாகோவிலுள்ளா எரிபொருள் நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.