தெருநாய்களைக் கருணைக் கொலை செய்ய இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி

தெருநாய்களைக் கருணைக் கொலை செய்ய இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி

2 mins read
8f096f84-e948-4176-996c-b8087f55a522
தெருநாய்க்கடிச் சம்பவங்களால் நாடு முழுவதும் ஏராளமான சிறாரு முதியவர்களும் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன. - படம்: ஓபிஇந்தியா

புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெறிநாய்க்கடிச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத நோய் பாதிப்புக்குள்ளான, ஆபத்தான தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அவ்வாறான அனுமதி அளிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். அதேநேரம், கருணைக் கொலை நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, சட்டரீதியான அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் கால்நடை மருத்துவ நிபுணர்களின் முறையான மதிப்பீடு அவசியம் என்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி் உள்ளது.

தெருநாய்க்கடிச் சம்பவங்களால் நாடு முழுவதும் ஏராளமான சிறாரும் முதியவர்களும் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன.

அதையடுத்து, கடந்த ஆண்டு (2025) ஜூலை மாதம் இந்திய உச்ச நீதிமன்றம் அந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரித்தது. அதன் தொடர்ச்சியாக, பொது இடங்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்துத் தடுப்பூசி அல்லது கருத்தடை செய்த பின் மீண்டும் அதே இடங்களில் விடக்கூடாது என்றும், அவற்றைப் பராமரிக்கப் பிரத்தியேகக் காப்பகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கடந்த நவம்பரில் உத்தரவிட்டது.

அந்த உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், தெரு நாய்களுக்கு ஆதரவாகப் பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பினர்.

நாய்க்கடித் தாக்குதல்கள் குறித்த பயமின்றி மக்கள் சுதந்திரமாக நடமாடுவது அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், கண்ணியத்துடன் வாழ்வதற்கான அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும், விலங்குப் பிறப்புக் கட்டுப்பாட்டு மையங்களைப் போதிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பதோடு, வெறிநாய்க்கடித் தடுப்பூசிகள் தடையின்றிக் கிடைப்பதையும் மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் உறுதிசெய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு எதிரான கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1960, விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் 2023 ஆகியவற்றுக்கு இணங்கவே அந்தக் கருணைக் கொலைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதும் இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்