வாஷிங்டன்: சீக்கியப் பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனை அமெரிக்க மண்ணில் கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் நிகில் குப்தா எனும் இந்திய ஆடவர் செக் குடியரசிலிருந்து அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
அமெரிக்கவாசியான பன்னுனைக் கொலை செய்ய நிகில் குப்தா சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்கா கூறுகிறது. பன்னுன் காலிஸ்தான் தனி நாடு தேவை என்று கோருபவர்.
நிகில் குப்தா 2023 ஜூன் மாதம் இந்தியாவிலிருந்து செக் குடியரசின் தலைநகரான பிராக் சென்றபோது அந்நாட்டு அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
விசாரணைக்காக அமெரிக்கா அனுப்பப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் அளித்த மனுவை செக் குடியரசின் நீதிமன்றம் நிராகரித்தது.
52 வயதாகும் குப்தா, புரூக்ளின் தடுப்புக் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அவர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவது குறித்து அமெரிக்க நீதித்துறை கருத்துரைக்க மறுத்துவிட்டது. குப்தாவின் அமெரிக்க வழக்கறிஞரும் செக் குடியரசின் அதிகாரிகளும் இதுகுறித்து உடனடியாகக் கருத்துரைக்கவில்லை.
அமெரிக்காவிலும் கனடாவிலும் சீக்கியப் பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்டங்கள் வெளிச்சத்துக்கு வந்த பிறகு இந்தியாவுடனான அந்நாடுகளின் உறவில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இவற்றில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது.