கூகல் நிறுவனத்துடன் இந்தியச் சுற்றுலா அமைச்சு ஒப்பந்தம்

கூகல் நிறுவனத்துடன் இந்தியச் சுற்றுலா அமைச்சு ஒப்பந்தம்

2 mins read
78265f72-f3e5-4489-b2d0-ba79002d4e0d
இந்திய அரசின் சுற்றுலா தொடர்பான விளம்பர முன்முயற்சிகளையும் மின்னிலக்கத் திறன்களையும் ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திரு ஷெகாவத் கூறினார். - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: இந்தியாவின் பண்பாட்டு, வரலாற்று முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்துவதில் மின்னிலக்கக் கட்டமைப்பு முக்கியப் பங்காற்ற முடியுமென இந்தியச் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் தெரிவித்துள்ளார்.

இந்தியச் சுற்றுலாத்துறையை மேம்படுத்த கூகல் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்மூலம் இந்திய அரசின் சுற்றுலா தொடர்பான விளம்பர முன்முயற்சிகளையும் மின்னிலக்கத் திறன்களையும் ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திரு ஷெகாவத் கூறினார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அதிக எண்ணிக்கையிலான பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் போட்டி நிறைந்த உலகளாவிய சுற்றுலாச் சந்தையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தவும் இந்தக் கூட்டு முயற்சி உதவும் என இந்திய அரசாங்கம் தெரிவித்தது.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களை மின்னிலக்கத் தளங்களில் இடம்பெறச் செய்வதன் மூலம் பயணிகளின் பயண ஏற்பாடுகளைச் சிறப்பாகத் திட்டமிட முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பயணிகளின் மற்ற விருப்பங்களைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அறிந்துகொள்வதும் இந்தக் கூட்டு முயற்சியின் முக்கியமான குறிக்கோள் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

கூகல் தளங்கள் மூலம் கிடைக்கும் தரவுப் பகுப்பாய்வுகள், சுற்றுலாத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சிகள், இணைய வழியில் செய்யப்படும் பயண ஏற்பாடுகள் எனப் பல்வேறு அம்சங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் இந்தியச் சுற்றுலாத்துறை கூறியுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இந்தப் புதிய ஒப்பந்தம் மூலம் மின்னிலக்கச் சந்தைப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை குறித்து அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்