நியூயார்க்: மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பதற்காக அமெரிக்கா சென்ற இந்தியக் குடும்பம் ஒன்றின் சுற்றுப்பயணம் சோகத்தில் முடிந்தது.
நியூயார்க் நகரிலுள்ள மத்திய பூங்கா பகுதியில் புதன்கிழமை (ஜூன் 17) குதிரை வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ரோமாஞ்ச் மகாஜன் என்ற 18 வயது இளையர் உயிரிழந்தார்.
அவர் தன் பெற்றோருடனும் தம்பியுடனும் அமெரிக்காவிற்குச் சுற்றுலா சென்றிருந்தார்.
பூங்காவின் பரபரப்பான சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றான செர்ரி ஹில் மற்றும் பெத்தஸ்டா நீரூற்றுக்கு அருகே பிற்பகல் 2:45 மணியளவில் குதிரை வண்டி விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்குடும்பத்தினர் குதிரை வண்டியில் சென்றுகொண்டிருந்தபோது, நிழற்படம் எடுப்பதற்காக வண்டியை நிறுத்தினர். அப்போது, குதிரை திடீரென மிரண்டு ஓடியது.
கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடிய அந்த வண்டியிலிருந்து ரோமாஞ்ச் தூக்கி வீசப்பட்டதாக நியூயார்க் போஸ்ட் செய்தி தெரிவித்தது. அதனால் அவர் தலையில் கடுமையாகக் காயமடைந்தார்.
பின்னர் அந்தக் குதிரை வண்டி, இன்னொரு வண்டியின் சக்கரத்தில் மோதி, தலைகீழாகக் கவிழ்ந்தது.
அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட ரோமாஞ்ச், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடர்புடைய செய்திகள்
மகாஜன் குடும்பத்தினரைப் படம் எடுப்பதற்காகக் குதிரை வண்டியின் ஓட்டுநர் வண்டியைவிட்டு இறங்கிச் சென்றதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குதிரை வண்டியைக் கவனிக்காமல் அப்படியே விட்டுச்சென்றது நடப்பிலுள்ள பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.


