தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தானுக்கு ஆதரவு; துருக்கி, அஸர்பைஜானைத் தவிர்க்கும் இந்தியச் சுற்றுப்பயணிகள்

2 mins read
938d4ccc-bd9a-48b8-9981-da29597587e0
இந்தியச் சுற்றுப்பயணிகள் ஜார்ஜியா, செர்பியா, கிரீஸ், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளுக்குச் செல்லத் திட்டமிடுவதாகப் பயண முகவர் ஒருவர் தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: அண்மைய இந்தியா - பாகிஸ்தான் சண்டையின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவளித்ததால் துருக்கிக்கும் அஸர்பைஜானுக்கும் சுற்றுப்பயணம் செல்வதாக இருந்த இந்தியர்கள் தங்களது அத்திட்டங்களைக் கைவிட்டு வருகின்றனர்.

இந்தியா வசமுள்ள காஷ்மீரில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பாகிஸ்தானே காரணம் என இந்தியா குற்றஞ்சாட்டியது. இதனையடுத்து, இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் மோசமடைந்தது.

ஆனால், இந்தியாவின் குற்றச்சாட்டைப் பாகிஸ்தான் மறுத்தது.

இந்நிலையில், சென்ற வாரம் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரிலும் ஒன்பது இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த ‘பயங்கரவாத முகாம்களுக்கு’ குறிவைத்ததாக இந்தியா கூறியது.

பின்னர் மே 10ஆம் தேதியன்று இருநாடுகளும் சண்டையை நிறுத்திக்கொள்ள உடன்பட்டன.

இதனிடையே, துருக்கியும் அஸர்பைஜானும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டன.

அந்நாடுகளின் இச்செயல் இந்தியர்களுக்குச் சினமூட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, அவ்விரு நாடுகளுக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்த இந்தியப் பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை ரத்துசெய்து வருவதாக பயண நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

“துருக்கிக்கும் அஸர்பைஜானுக்குமான பயண முன்பதிவு 60 விழுக்காடு குறைந்துள்ளது. மேலும், கடந்த ஒருவாரத்தில் அந்நாடுகளுக்குப் பயண முன்பதிவு ரத்துசெய்யப்படுவது 250 விழுக்காடு அதிகரித்துள்ளது,” என்று ‘மேக்மைடிரிப்’ நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

அதுபோல, துருக்கிக்கான பயண முன்பதிவு ரத்து 22 விழுக்காடும் அஸர்பைஜானுக்கு 30 விழுக்காடும் அதிகரித்துள்ளதாக ஈஸ்மைடிரிப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரிக்கந்த் பிட்டி தெரிவித்தார்.

மாறாக, இந்தியச் சுற்றுப்பயணிகள் ஜார்ஜியா, செர்பியா, கிரீஸ், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளுக்குச் செல்லத் திட்டமிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2024ஆம் ஆண்டில் 287,000 இந்தியர்கள் துருக்கிக்கும் 243,000 இந்தியர்கள் அஸர்பைஜானுக்கும் சென்றுவந்ததாக ஈஸ்மைடிரிப் நிறுவனரும் தலைவருமான திரு நிஷாந்த் பிட்டி கூறினார்.

“அந்நாடுகள் வெளிப்படையாகப் பாகிஸ்தானை ஆதரிக்கும்போது, அவர்களின் சுற்றுப்பயணத் துறைக்கும் பொருளியலுக்கும் நாங்கள் ஏன் பங்களிக்க வேண்டும்?” என்றார் திரு நிஷாந்த்.

இன்னொரு பயண முன்பதிவுத்தளமான இக்சிகோ, துருக்கி, அஸர்பைஜான், சீனா ஆகிய நாடுகளுக்கான பயண, ஹோட்டல் முன்பதிவுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

திருப்பி அனுப்பப்பட்ட துருக்கி ஆப்பிள்

இதனிடையே, துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள் பழங்களை மும்பை வணிகர்கள் திருப்பி அனுப்பியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், துருக்கிக்கு ரூ.1,500 கோடிவரை இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், துருக்கியிலிருந்து சலவைக்கல் (மார்பிள்) இறக்குமதியையும் நிறுத்த இந்திய வணிகர்கள் முடிவுசெய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்