கொழும்பில் இலங்கை அதிபருடன் இந்தியத் துணை அதிபர் பேச்சு

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான தீர்வு காண கோரிக்கை

கொழும்பில் இலங்கை அதிபருடன் இந்தியத் துணை அதிபர் பேச்சு

2 mins read
a364ab71-c808-486d-ade7-26f74703c3a8
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகேவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார் துணை அதிபர் சி.பி. ராதாகிருஷ்ணன்.  - படம்: பிடிஐ

கொழும்பு: அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள இந்தியத் துணை அதிபர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே முன்மொழியப்பட்ட எண்ணெய்க் குழாய்த் திட்டங்கள் குறித்து அந்நாட்டு அதிபருடன் விவாதித்தார்.

இதுகுறித்து கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு அம்சங்களில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, வீட்டுவசதித் திட்டங்கள், மீனவர் பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்தியதாகக் குறிப்பிட்டார்.

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கு இருதரப்பினரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என திரு சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள திரு சி.பி. ராதாகிருஷ்ணன், அங்கு அந்நாட்டு அதிபர் அனுர குமார திசநாயகேவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எண்ணெய்க் குழாய் மூலம் இணைப்பு ஏற்படுத்துவது குறித்த முன்மொழிவு பற்றி இருவரும் விரிவாக விவாதித்தனர்.

திருகோணமலையில் எரிசக்தி மையம் அமைப்பது தொடர்பான திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக திரு மிஸ்ரி கூறினார்.

அதிபர் திசநாயகேவுடனான தனது சந்திப்பின்போது, ​​இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கை, வளர்ச்சி சார்ந்த இருதரப்பு ஒத்துழைப்புக்கு திரு ராதாகிருஷ்ணன் முக்கியத்துவம் அளித்ததாக இந்தியா தெரிவித்தது.

இதையடுத்து, இலங்கைத் தமிழ்க் கட்சிகள், இந்திய வம்சாவளித் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் துணை அதிபர் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார்.

அப்போது ‘டிட்வா’ புயலுக்குப் பிறகு 45 கோடி டாலர் மதிப்பிலான புனர்வாழ்வு மற்றும் நிவாரணத் திட்ட நடவடிக்கைகளுக்காக இந்திய அரசாங்கத்திற்கு தமிழ்க் கட்சிகள் நன்றி தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கொழும்பு சென்றடைந்த இந்தியத் துணை அதிபரை விமான நிலையத்தில், அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே வரவேற்றார். அவருக்கு இலங்கையின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய சிவப்புக் கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.

இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றின் தற்போதைய நிலை குறித்து இந்தியத் துணை அதிபர் கேட்டறிந்தார்.

அங்குள்ள தமிழ்ச் சமூகத்தினருக்கான வீடுகளின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்தத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின்கீழ், மேலும் 10,000 வீடுகள் தற்போது கட்டப்பட்டு வருவதாக இலங்கை அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆண்டுகளில், இந்தியத் துணை அதிபர் ஒருவர் இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறை.

குறிப்புச் சொற்கள்