புதுடெல்லி: இந்தியாவின் 15வது துணை அதிபரைத் தேர்ந்தெடுக்க, செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியதும் பிரதமர் நரேந்திர மோடி முதலில் வாக்களித்தார். பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வாக்களித்தனர்.
காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து, உடனடியாக மாலை 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இம்முறை, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும் இண்டியா கூட்டணி சார்பாக ஆந்திராவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த 781 உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். எனினும், ஒரு சுயேச்சை, பிஜு ஜனதாதளம் கட்சி உறுப்பினர்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.
எனவே, 768 வாக்குகள் மட்டுமே பதிவாகின.
மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, ஜே.பி. நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் வாக்களித்தனர். நிதின் கட்காரியும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் நாடாளுமன்றத்திற்கு வந்தபோது கைகுலுக்கிக் கொண்டனர்.
முன்னாள் பிரதமரான தேவகவுடாவுக்குத் தற்போது 92 வயதாகிறது. எனினும், சக்கர நாற்காலியில் வந்திருந்து, அவர் துணை அதிபர் தேர்தலில் வாக்களித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாக்கு எண்ணிக்கையின் முடிவில், சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
மற்றொரு வேட்பாளரான நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
இதையடுத்து, புதிய இந்திய துணை அதிபராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் விரைவில் பதவியேற்க உள்ளார்.
அவருக்குப் பிரதமர் மோடி, அதிபர் திரௌபதி முர்மு உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.