கோழிக்கோடு: அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய ஆடவர், விமான நிலையத்திலிருந்து வீட்டிற்குச் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இத்துயர நிகழ்வு கேரள மாநிலம், வடகரை முக்காலி அருகே புதன்கிழமை (செப்டம்பர் 4) காலை 6.30 மணியளவில் நேர்ந்தது.
கண்ணூர் மாவட்டம், தலசேரி வட்டம், நியூ மாகியைச் சேர்ந்தவர் ஷிஜில், 40. புதன்கிழமை காலையில் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தை வந்தடைந்த அவர், அங்கிருந்து ஒரு டாக்சி மூலம் தமது வீட்டிற்குச் சென்றபோது விபத்து நேரிட்டது.
டாக்சி ஓட்டுநரான 38 வயது ஜுபினும் விபத்தில் மாண்டுபோனார். அவரும் தலசேரியைச் சேர்ந்தவர்.
கோழிக்கோடு விமான நிலையத்திலிருந்து நியூ மாகி நோக்கி சென்ற டாக்சி, எதிர்த்திசையில் வந்த சரக்கு லாரியுடன் மோதியதைக் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளி காட்டியது.
அச்சரக்கு வாகனம், தலசேரியிலிருந்து கோழிக்கோடு நோக்கிச் சென்றதாக மனோரமா செய்தி தெரிவித்தது.
விபத்தைத் தொடர்ந்து, சொம்பலா காவல்துறையினரும் அப்பகுதிவாசிகளும் நிகழிடத்திற்கு விரைந்து, மீட்புப் பணியில் இறங்கினர். காரின் முன்பகுதி முற்றிலும் சிதைந்துபோனது. அதன் ஓட்டுநர் ஜுபின் உள்ளேயே சிக்கியிருந்தார்.
தீயணைப்பு, மீட்புத் துறையினர் மிகுந்த சிரமப்பட்டு அவரது உடலை வெளியில் எடுத்தனர். விபத்தில் இறந்துபோன இருவரின் உடல்களும் உடற்கூறாய்விற்காக வடகரை அரசு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
வாகனத்தில் வேகமாகச் சென்றதால்தான் விபத்து ஏற்பட்டதா என்பதைக் காவல்துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. சரக்கு வாகன ஓட்டுநர் இன்னும் காவல் நிலையத்தை வந்தடையவில்லை என்று காவல்துறை சொன்னதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.