அமிர்தசரஸ்: பாகிஸ்தானின் கராச்சி நகருக்குக் கடத்தப்பட்ட இந்தியப் பெண் ஒருவர், ஒருவழியாக 22 ஆண்டுகளுக்குப்பின் நாடு திரும்பினார்.
ஹமிடா பானு, 75, என்ற இப்பெண்மணியின் பயணம் வாழ்வா சாவா எனப் பெரும்போராட்டமாக இருந்தது.
திங்கட்கிழமையன்று (டிசம்பர் 16) வாகா எல்லை வழியாக இந்தியாவிற்குத் திரும்பிய திருவாட்டி ஹமிடாவை வரவேற்க மும்பையிலிருந்து ரயில் மூலம் அவருடைய மகள், சகோதரி, சகோதரன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
கராச்சியிலிருந்து புறப்பட்டபோது, தங்களைவிட்டுப் பிரிவதால் வருந்துவீர்களா எனத் திருவாட்டி ஹமிடாவிடம் அவருடைய கணவரின் உறவினர்கள் கேட்டனர்.
அதற்கு, “ஒருபோதும் வருந்தமாட்டேன். தாய்நாட்டிற்குத் திரும்புவதில் எனக்குப் பெருமகிழ்ச்சி,” என்று அவர் பதிலளித்தார்.
“அது துரோகம் என நினைக்கவில்லையா?” என்று அவர்கள் கேட்டதற்கு, வேடிக்கையாகத்தான் சொன்னதாகக் கூறி, அவர்களைச் சமாதானப்படுத்தினார் திருவாட்டி ஹமிடா.
வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று குடும்பத்தினர் அறிவுறுத்தியபோதும், தன் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டும் என்பதில் தம் தாயார் உறுதியாக இருந்தார் என்று கர்நாடகத்தில் வேலைசெய்யும் அவருடைய மகன் கூறினார்.
இரு மகள்கள், இரு மகன்கள் என நான்கு பிள்ளைகளுக்குத் தாயான திருவாட்டி ஹமிடா, சமையல்காரராக வேலைசெய்ய கத்தார் சென்றார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், 2002ஆம் ஆண்டு துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவரைக் கராச்சிக்குக் கடத்தினார் ஆட்சேர்ப்பு முகவர் ஒருவர்.
அங்கு தெருக்களே திருவாட்டி ஹமிடாவின் வசிப்பிடம் ஆனது. சில நேரங்களில் அங்குள்ள ஒரு பள்ளிவாசலில் தங்கினார். சிறிது காலத்திற்கு ஒரு சிறிய கடையையும் அவர் நடத்தினார்.
அங்கு விரைவில் தர் முகம்மது என்ற பாகிஸ்தானிய ஆடவருடன் அவருக்குத் திருமணமானது. சில ஆண்டுகளுக்குமுன் முகம்மது இறந்துவிட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டு யூடியூபரான வாலியுல்லா மரூஃப் என்பவர், திருவாட்டி ஹமிடாவை நேரில் கண்டபோது, பெங்களூரைச் சேர்ந்த ஷானாஸ் என்ற பெண்ணும் தாமும் கராச்சிக்குக் கடத்தப்பட்டதை அவர் பகிர்ந்துகொண்டார்.
அக்காணொளி இணையத்தில் பரவியது. திருவாட்டி ஹமிடாவின் அடையாளத்தை உறுதிப்படுத்திய பிறகு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அவர் கராச்சியிலிருந்து லாகூர் செல்வதற்கான விமானப் பயணச்சீட்டை வழங்கியது. பின்னர் அவர் அங்கிருந்து வாகா எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இறுதியாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டதாகத் திரு மரூஃப் விவரித்தார்.
திருவாட்டி ஹமிடாவின் மகள்கள் யாஸ்மினும் பர்வீனும் தங்கள் தாயாரின் வருகைக்காகக் காத்திருந்தனர் என்றும் அவர் சொன்னார்.
திருவாட்டி ஷானாசும் பாகிஸ்தானிய ஆடவர் ஒருவரை மணந்துகொண்டார் என்றும் கணவர் இறந்துவிட்டதால் அவரது நிலைமையும் மோசமாக உள்ளது என்றும் திருவாட்டி ஹமிடா தெரிவித்தார்.
“திருவாட்டி ஷானாஸ் உதவியின்றித் தவிக்கிறார். அவரது வீட்டு வாடகைக்கும் நான்தான் பணம் கொடுக்கிறேன். அவரையும் இந்தியாவிற்கு மீட்டுக்கொண்டுவர முயன்று வருகிறேன்,” என்றும் திருவாட்டி ஹமிடா சொன்னார்.