மும்பை: பாகிஸ்தானிலிருந்து அண்மையில் இந்தியா திரும்பிய பெண்ணை அந்நாட்டுக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம், தானேவைச் சேர்ந்த நக்மா நூர் மக்சூத் அலி என்ற அப்பெண், போலி ஆவணங்கள் மூலம் பாகிஸ்தான் சென்றதாகக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இணையம் வழியாக பாகிஸ்தான் ஆடவர் ஒருவரை நக்மா இவ்வாண்டு மணமுடித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, அவரை நேரில் காண முடிவுசெய்த நக்மா, அதற்காகத் தமது பெயர், ஆதார் அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்களை அளித்து, பாகிஸ்தான் விசா பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
இம்மாதம் 17ஆம் தேதி நக்மா பாகிஸ்தானிலிருந்து திரும்பினார். ஆனால், ஆவணங்களில் அவரது பெயர் சனம் கான் ரூக் என்றிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அபோட்டாபாத்தைச் சேர்ந்த பாபர் பஷீர் அகமது என்ற ஆடவருடன் ஃபேஸ்புக் வழியாக நக்மாவிற்கு அறிமுகம் ஏற்பட்டது. விரைவில் காதல் மலர, இருவரும் தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் விசாவிற்கு நக்மா விண்ணப்பம் செய்தார். ஆயினும், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், 2024 பிப்ரவரியில் இணையம் வழியாக பாபரைத் திருமணம் செய்துகொண்ட நக்மா, மீண்டும் பாகிஸ்தான் விசா கேட்டு விண்ணப்பம் செய்தார். ஆனால், அதற்கான ஆவணங்களில் அவரது பெயர் சனம் என்றிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனிடையே, காவல்துறை கூறுவதில் உண்மையில்லை என்கிறார் நக்மாவின் தாயார். கடந்த 2015ஆம் ஆண்டு தன் கணவரைப் பிரிந்தபிறகு, தன் பெயரையும் தன் பிள்ளைகளின் பெயரையும் மாற்றிக்கொண்டதாக அவர் கூறுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
இவ்விவகாரம் தொடர்பில் இதுவரை எவரையும் காவல்துறை கைதுசெய்யவில்லை. ஆனாலும், தொடர்ந்து விசாரித்து வருகிறது.