ஆக நீளமான கூந்தல்! இந்தியப் பெண் கின்னஸ் சாதனை (காணொளி)

ஆக நீளமான கூந்தல்! இந்தியப் பெண் கின்னஸ் சாதனை (காணொளி)

2 mins read
தலைமுடி தரையைத் தழுவினாலும் இன்னும் வளர்க்க விரும்புகிறார்!
4ae02142-e6cb-43dc-bb00-977ba3ac9daa
கின்னஸ் சாதனைக்கான சான்றிதழுடன் ஸ்மிதா. - படங்கள்: கின்னஸ் சாதனைப் புத்தகம்
multi-img1 of 2
Google News Preferred Icon

உலகிலேயே ஆக நீளமான கூந்தலுடையவர் என்ற சாதனையைப் படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் ஸ்மிதா ஸ்ரீவாஸ்தவா, 46.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸ்மிதா, தமது 14ஆவது வயதிலிருந்து கூந்தலை வெட்டவே இல்லை. இப்போது இவரது கூந்தலின் நீளம் 7 அடி 9 அங்குலம் (236.22 சென்டிமீட்டர்).

இதுகுறித்து ஸ்மிதா கூறுகையில், “இந்தியக் கலாசாரத்தில், பெண் தெய்வங்கள் நீண்ட கூந்தலை உடையவர்களாகக் காட்டப்படுகின்றனர். எங்களது சமுதாயத்தில், பெண்கள் கூந்தலைக் கத்தரிப்பது அமங்கலமானதாகப் பார்க்கப்படுகிறது. அதனால்தான் பெண்கள் கூந்தலை வளர்க்கின்றனர்,” என்றார்.

-

நீளமான கூந்தல் பெண்ணுக்கு மேலும் அழகூட்டுகிறது என்றும் இவர் சொன்னார்.

ஸ்மிதா வாரம் இருமுறை தலையை அலசுகிறார். அதற்கு 30 முதல் 45 நிமிடங்கள் ஆகின்றன. பின்னர் துவாலையால் தலையைத் துவட்டிவிட்டு, கைகளாலேயே சிக்கெடுக்கிறார். இப்படி, கூந்தலை அலசி, காயவைத்து, பின் அழகுபடுத்த மூன்று மணிநேரம் ஆகிறதாம்.

1980களில் நடித்த இந்திப்பட நடிகைகளின் தனித்துவமான கூந்தல் அலங்காரங்களால் தான் ஈர்க்கப்பட்டதாக ஸ்மிதா குறிப்பிட்டார்.

கூந்தலை எப்படிப் பராமரிக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டபோது, “படுக்கையில் நின்றபடி, கீழே ஒரு துணியை விரித்துப்போட்டு, என் கூந்தலில் சிக்கெடுப்பேன்,” என்றார்.

“பெண்கள் பலரும் என்னருகே வந்து, என் கூந்தலைத் தொட்டுப் பார்த்து, என்னுடன் படமெடுத்துக்கொள்கின்றனர். என் நீண்ட, அழகான கூந்தலுக்கு நான் பயன்படுத்தும் பொருள்கள் பற்றிக் கேட்பர்,” என்று ஸ்மிதா கூறினார்.

இறுதியாக, “இன்னும் நீளமாக என் கூந்தலை வளர்க்க விரும்புகிறேன். எவ்வளவு காலத்திற்கு என்னால் இதைப் பராமரிக்க முடியும் என்று பார்ப்போம்,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்