அமெரிக்காவில் இந்தியப் பெண் கொலை: ஆக்ராவில் இளையர் கைது

அமெரிக்காவில் இந்தியப் பெண் கொலை: ஆக்ராவில் இளையர் கைது

2 mins read
cc94cbc9-730a-4465-bad8-7a28b55ae45d
கொல்லப்பட்ட நிகிதா கொடிஷாலா (இடது), கைது செய்யப்பட்ட அர்ஜுன் சர்மா. - படங்கள்: என்டிடிவி
Google News Preferred Icon

புதுடெல்லி: அமெரிக்காவில் இந்தியப் பெண் நிகிதா கொடிஷாலா கொடூரமாகக் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த அர்ஜுன் சர்மா இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலம், கொலம்பியா பகுதியில் அமைந்த அர்ஜுன் சர்மாவின் குடியிருப்பில் நிகிதா, 27, கத்திக்குத்துக் காயங்களுடன் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

எல்லிகாட் நகரில் வசித்து வந்த நிகிதா மாயமானது குறித்து 2026 ஜனவரி 2ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இக்கொலைச் சம்பவம் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நடைபெற்றதாகக் கருதப்படுகிறது.

இச்சம்பவத்திற்குப் பிறகு அர்ஜுன் சர்மா, 26, அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஆனந்த் கொடிஷாலா ஏப்ரல் மாதத்தில் தெலுங்கானாவில் பண மோசடிப் புகார் அளித்தார்.

அப்புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஹைதராபாத் தனிப்படைக் காவல்துறையினர் ஆக்ராவில் அர்ஜுன் சர்மாவைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.

அமெரிக்கக் காவல்துறையினரால் முதல், இரண்டாம் நிலைக் கொலைக் குற்றச்சாட்டுகளின்கீழ் அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மத்தியப் புலனாய்வு அமைப்புகள் புதுடெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்தி ஆகஸ்ட் 25ஆம் தேதி காவலில் எடுத்தன.

அர்ஜுன் சர்மாவை முன்னாள் காதலன் என்று அமெரிக்கக் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

ஆனால், அதை மறுத்த நிகிதாவின் தந்தை, அர்ஜுன் சர்மா தமது மகளின் காதலன் அல்லர் என்றும், அவர் நிகிதாவுடன் ஓர் அறையைப் பகிர்ந்துகொண்டு தங்கியிருந்த நண்பர் மட்டுமே என்றும் ஊடகங்களிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

“இந்தக் கொலை பண ஆதாயத்தை நோக்கமாகக் கொண்டு நடந்துள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் பணியாற்றி வந்த நிகிதாவிடம் வேலை இழந்த அர்ஜுன் சர்மா கடன் பெற்றிருந்தார்.

பணம் குறித்த தகராறுகள் நிலவி வந்த நிலையில் இந்தக் கொலை நடந்தது.

கைது செய்யப்பட்ட அர்ஜுன் சர்மா விரைவில் அமெரிக்காவிற்குக் கொண்டுசெல்லப்படுவார் என்று அனைத்துலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற இந்த முக்கியக் கைது நடவடிக்கையை ஹைதராபாத்தில் வசிக்கும் நிகிதாவின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்