ஃபேஸ்புக் காதலரை மணக்க பாகிஸ்தான் சென்ற இந்தியப் பெண் நாடு திரும்பினார்

ஃபேஸ்புக் காதலரை மணக்க பாகிஸ்தான் சென்ற இந்தியப் பெண் நாடு திரும்பினார்

2 mins read
e14c7d49-8342-44fd-a957-5907cc16d3fd
அஞ்சு என்ற ஃபாத்திமாவும் அவருடைய பாகிஸ்தான் கணவர் நஸ்ருல்லாவும். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

அமிர்தசரஸ்: தன் ஃபேஸ்புக் காதலரைத் திருமணம் செய்துகொள்வதற்காக பாகிஸ்தான் சென்ற இந்தியப் பெண் புதன்கிழமையன்று வாகா (நவம்பர் 29) எல்லை வழியாகத் தாய்நாடு திரும்பினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஞ்சு, 34, எனும் அப்பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாநிலத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்திற்குச் சென்ற அவர், அங்கு தன் 29 வயது ஃபேஸ்புக் காதலன் நஸ்ருல்லாவை மணந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நஸ்ருல்லாவே அஞ்சுவை வாகா எல்லைக்குக் கொண்டுவந்துவிட்டார்.

இந்தியா திரும்பிய அஞ்சு, செய்தியாளர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. டெல்லி செல்வதற்காக அவர் நேரடியாக பஞ்சாப்பின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்குச் சென்றார். புர்கா ஆடையுடன் அமிர்தசரஸ் ஸ்ரீ குரு ராம்தாஸ் அனைத்துலக விமான நிலையத்தில் அவரைக் காண முடிந்தது.

அங்கு, “இந்தியாவிலுள்ள என் குடும்பத்தைக் காண வந்துள்ளேன். என் விருப்பத்தின் பேரிலேயே இந்தியா வந்துள்ளேன்,” என்று ஊடகத்தினரிடம் அவர் சொன்னார்.

விசா பெற்று கடந்த ஜூலை மாதம் வாகா எல்லை வழியாக அஞ்சு பாகிஸ்தான் சென்றார். அங்கு சென்றபின் இஸ்லாம் சமயத்தைத் தழுவி, அவர் தன் பெயரை ஃபாத்திமா என மாற்றிக்கொண்டார். பின்னர் நான்கு ஆண்டுகளாக ஃபேஸ்புக் வழியாகப் பழகிய நஸ்ருல்லாவை மணந்துகொண்டார்.

அஞ்சு ஜெய்ப்பூருக்குப் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றதாகவும் அவர் பாகிஸ்தான் சென்றது பின்னரே தெரியவந்ததாகவும் அவருடைய இந்தியக் கணவர் அரவிந்த் கூறினார்.

அரவிந்தும் அஞ்சுவும் ராஜஸ்தானின் பிவாடி பகுதியில் வசித்து வந்தனர். அஞ்சு, உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள கெய்லர் எனும் சிற்றூரைச் சேர்ந்தவர்.

இதனிடையே, அரவிந்த் இப்போது பிவாடியில் இல்லை என்றும் அவர் தம் குழந்தைகளுடன் வேறு எங்கோ சென்றுவிட்டார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், அரவிந்தை விவாகரத்து செய்துவிட்டு, தம் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு பாகிஸ்தானுக்குத் திரும்ப அஞ்சு திட்டமிட்டுள்ளதாக ‘இந்தியா டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது.

குழந்தைகளைப் பிரிந்ததால் அவர் மனத்தளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தொலைபேசி வழியாக நஸ்ருல்லா ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்